2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'ரஷ்யாவை முழுமையாகத் தடை செய்க'

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 17 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள றியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து முழுமையாகத் தடைசெய்யப்பட வேண்டுமெனக் கோரி, ஐக்கிய அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளின் ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மைகள் எழுதிய கடிதமொன்று, கசிந்துள்ளது.

ஏற்கெனவே, 2008ஆம், 2012ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ரஷ்யாவின் பல வீர, வீராங்கனைகள், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டதோடு, அதற்கு அந்நாட்டின் ஆதரவும் கிடைத்திருந்தமை வெளிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, றியோ ஒலிம்பிக் போட்டிகளில், ரஷ்யாவின் தட, கள வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், 2014ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சியில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், ரஷ்யாவின் வீர, வீராங்கனைகள், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபட்டார்களா என்பதற்கான மக்லரன் புலனாய்வு அறிக்கை, இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த அறிக்கையில், அரச ஆதரவுடனான ஊக்கமருந்துப் பாவனை இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால், றியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து, ரஷ்யா முழுமையாகத் தடைசெய்யப்பட வேண்டுமெனக் கோரப்படவுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ட்ரவிஸ் தைகார்ட், விளையாட்டுக்களுக்கான கனடாவின் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி போல் மெலியா ஆகியோர் கையெழுத்திட்டுள்ள இந்த வரைவுக் கோரிக்கையில், "ஒலிம்பிக்கின் கொள்கைகளை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையில், தவறிழைக்காத வீரர்கள் சார்பாகவும் ஊக்கமருந்துக்கெதிரான அமைப்புகள் சார்பாகவும் இந்தக் கோரிக்கையை விடுக்கின்றோம். ஆகவே, கொள்கைகளின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டு றியோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ரஷ்யாவின் ஒலிம்பிக், பரா ஒலிம்பிக் குழுவைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, றியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவைச் சேர்ந்த எந்தவொரு வீர, வீராங்கனையும் பங்குபெற முடியாத நிலையை ஏற்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள், மக்லரன் அறிக்கைக்காகத் தம்மைத் தயார்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .