2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வெற்றியுடன் டெரியை அனுப்பியது சம்பியன் செல்சி

Editorial   / 2017 மே 23 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக்கில், ஏற்கெனவே சம்பியனான செல்சி, தமது அணித்தலைவர் ஜோன் டெரிக்கு, வெற்றிப் பிரியாவிடை வழங்கியது.  

செல்சி, 5-1 என்ற கோல் கணக்கில், நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற போட்டியில் சந்தர்லேண்டைத் தோற்கடித்தது. செல்சி சார்பாக, மிக்கி பச்சுவாய் இரண்டு கோல்களையும் வில்லியன், ஈடின் ஹஸார்ட், பெட்ரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். சந்தர்லேண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை, ஹையர் மந்தியோ பெற்றார். 

38 போட்டிகளைக் கொண்ட இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலத்தில், மேற்படி போட்டியில் செல்சி பெற்ற வெற்றியானது, இப்பருவகாலத்தில் செல்சி பெறும் 30ஆவது வெற்றி என்ற நிலையில், 38 போட்டிகளைக் கொண்ட பருவகாலத்தில், 30 வெற்றிகளைப் பெறும் முதலாவது இங்கிலாந்துக் கழகம், செல்சியாகும்.  

செல்சிக்காக 717 போட்டிகளில் விளையாடியுள்ள டெரி, அவற்றில் 580 போட்டிகளில் அணித்தலைவராக இருந்துள்ளார்.  

இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், மன்செஸ்டர் சிற்றி, லிவர்பூல், ஆர்சனல், மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகிய அணிகளும் வெற்றிபெற்ற நிலையில், லெய்செஸ்டர் சிற்றி, தமது போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது. 

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 7-1 என்ற கோல் கணக்கில் ஹள் சிற்றியைத் தோற்கடித்தது. டொட்டென்ஹாம் சார்பாக, ஹரி கேன் மூன்று கோல்களையும் டெலே அலி, விக்டர் வன்யமா, பென் டேவிஸ், டொபி அல்டர்வெய்ல்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஹள் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை, சாம் குளூகாஸ் பெற்றார். இப்போட்டியுடன், இப்பருவகால பிறீமியர் லீக்கில் 30 போட்டிகளில் விளையாடியுள்ள கேன், 29 கோல்களைப் பெற்று, தொடர்ச்சியாக இரண்டாவது பருவகாலமாக, பிறீமியர் லீக்கில் அதிக கோல்களைப் பெற்றவராகத் திகழ்கின்றார்.

மன்செஸ்டர் சிற்றி, 5-0 என்ற கோல் கணக்கில், வட்போர்ட்டை வென்றது. சிற்றி சார்பாக, சேர்ஜியோ அஃவரோ இரண்டு கோல்களையும் வின்சென்ட் கொம்பனி, பெர்ணான்டின்ஹோ, கப்ரியல் ஜெஸுஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.  

லிவர்பூல், 3-0 என்ற கோல் கணக்கில், மிடில்ஸ்பேர்கை வென்றது. லிவர்பூல் சார்பாக, ஜோர்ஜினியோ விஜ்நால்டும், பிலிப் கோச்சினியோ, அடம் லலானா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.  

ஆர்சனல், 3-1 என்ற கோல் கணக்கில், எவெர்ற்றனை வென்றது. ஆர்சனல் சார்பாக, ஹெக்டர் பெல்லரின், அலெக்சிஸ் சந்தேஸ், ஆரோன் றாம்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை, றொமேலு லுக்காக்கு பெற்றார்.  

மன்செஸ்டர் யுனைட்டெட், 2-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பலஸை வென்றது. யுனைடெட் சார்பாக, ஜொஷ் ஹரொப், போல் பொக்பா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.  

கடந்த பருவகால பிறீமியர் லீக் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி, போர்ண்மெத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.  

இப்போட்டிகளின் முடிவில், இப்பருவகால பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், 93 புள்ளிகளுடன் செல்சி முதலிடத்தையும், 86 புள்ளிகளுடன் டொட்டென்ஹாம் இரண்டாமிடத்தையும் 78 புள்ளிகளுடன் மன்செஸ்டர் சிற்றி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன. இந்த மூன்று அணிகளுடன், 76 புள்ளிகளுடன் நான்காமிடத்தைப் பெற்ற லிவர்பூல், சம்பியன்ஸ் லீக்குக்கான இறுதி அணியாக தகுதிபெற்ற நிலையில், 75 புள்ளிகளைப் பெற்றும் ஐந்தாமிடமே பெற்ற ஆர்சனல், 20 ஆண்டுகளில், முதற்தடவையாக, சம்பியன்ஸ் லீக் தகுதியைத் தவறவிட்டுள்ளது. 69 புள்ளிகளுடன் ஆறாமிடத்தை யுனைடெட் பெற்றுள்ளதுடன், 61 புள்ளிகளுடன் ஏழாமிடத்தை எவெர்ற்றன் பெற்றுள்ளதுடன், லெய்செஸ்டர், 44 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .