2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விடுவிக்கப்படவுள்ள டெஸ்ட் வீரர்கள்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியதீவுகள் அணிக்கெதிரான அவுஸ்திரேலியாவின் முதலாவது, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கிடையே இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபது-20 தொடரான பிக் பாஷ் லீக்கின் போட்டிகளில் பங்குபற்ற சில அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதை கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதிப்படுத்தியது.

முதலாவது டெஸ்ட் போட்டி ஹோபார்ட்டில் டிசம்பர் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெற்று, பதினொரு நாட்கள் இடைவெளியின் பின்னரே, டிசம்பர் 26ஆம் திகதி “பொக்ஸிங் டே” டெஸ்ட் போட்டி மெல்பேர்ணில் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையிலேயே, டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள பிக் பாஷ் லீக்கின், குறைந்தது முதல் நான்கு போட்டிகளுக்காவது பங்குபற்றுவதற்கு சில அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் வீரர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

எனினும் வேகப்பந்துவீச்சாளர்கள் பிக் பாஷ் லீக்கில் பங்குபெறமாட்டார்கள் என்பதுடன், இந்தப் பருவகால பிக் பாஷ் லீக் போட்டிகளுக்காக எந்தவொரு அணியுடனும் இதுவரை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்காத ஆரம்பத் துடுப்பாட்டவீரர் டேவிட் வோணர், கர்ப்பமாக உள்ள தனது மனைவியுடன் நேரத்தை செலவழிப்பார்  என்று கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளில் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷின் வேலைப்பழுவை பொறுத்தே, அவர், மேற்குறிப்பிட்ட இடைவேளையில் பிக் பாஷ் லீக்கில் பங்கேற்பாரா என்பது முடிவு செய்யப்படவுள்ளது.

இதன்படி அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவேன் ஸ்மித், ஜோ பேர்ண்ஸ், பீற்றர் நெவில், நதன் லயோன் ஆகியோர்  டிசம்பர் 17 தொடக்கம் 20 வரையான போட்டிகளில் பங்குபற்றக் கூடிய நிலை காணப்படுவதுடன், உடற்றகுதி ஒத்துழைக்கும் பட்சத்தில் உஸ்மான் க்வாஜாவும் மேற்படி காலத்தில் போட்டிகளில் கலந்து கொள்வார்.

இதேவேளை, டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ள பேர்த் ஸ்க்ரோச்சேர்ஸ் அணியின் வீரர்களான அடம் வொஜஸ், ஷோர்ன் மார்ஷ், மிட்செல் மார்ஷ் ஆகியோரும், டிசம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள அவ்வணியின் முதலாவது போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

“பொக்ஸிங் டே” டெஸ்ட் போட்டிக்காக டிசம்பர் 22ஆம் திகதி மெல்பேர்ணில்‌ டெஸ்ட் வீரர்கள் கூடவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .