2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

விலகினார் இந்தியன் வெல்ஸ் நிறைவேற்று அதிகாரி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 22 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் டென்னிஸ் தொடர்பாக இழிவுபடுத்தும் கருத்துகளை வெளியிட்ட இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் சுற்றுத் தொடரின் பிரதம நிறைவேற்று அதிகாரி றேமன்ட் மூர்ஸ், அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பெண்களின் டென்னிஸ் தப்பிப் பிழைப்பதற்கு, ஆண்களின் டென்னிஸ் போட்டிகளே காரணம் என்ற கருத்தை வெளியிட்ட றேமன்ட் மூர்ஸ், பெண்கள் தொடர்பாகவும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

டென்னிஸிலுள்ள பெண்கள், முடிவுகளை எடுப்பதில்லை எனத் தெரிவித்த அவர், அவர்கள், மிகவும் அதிர்ஷ்டசாலிகள் எனக் குறிப்பிட்டிருந்தார். 'நானொரு பெண் டென்னிஸ் வீராங்கனையாக இருந்திருந்தால், ரொஜர் பெடரரும் ரபேல் நடாலும் பிறந்தமைக்காக, எனது முழங்காலில் அமர்ந்து, கடவுளுக்கு நன்றி செலுத்தியிருப்பேன். ஏனெனில், அவர்கள் தான் இந்த  (பெண்களின்) விளையாட்டைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர் தான் கொண்டுசென்றிருக்கிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார். அத்தோடு, பெண் டென்னிஸ் வீராங்கனைகளில் சிலர், உடலியல்ரீதியாக கவரக்கூடியவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துக்கு, அவர் பின்னர் மன்னிப்புக் கோரியிருந்த போதிலும், அதற்கு முன்னரே, அவருக்கெதிராக அதிகபட்ச எதிர்ப்பு வெளியாகியிருந்தது.

அவரது கருத்துக்கெதிராகக் கருத்துத் தெரிவித்த உலகின் முதன்நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், 'எந்தவொரு பெண்ணும், அவ்வாறு முழங்காலில் நின்று ந4ன்றி தெரிவிக்க வேண்டுமென நான் நினைக்கவில்லை" எனத் தெரிவித்ததோடு, தானோ அல்லது தனது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸோ விளையாடுவதைப் பார்த்தாலொழிய, டென்னிஸைப் பார்ப்பதில்லை எனத் தன்னிடம் தெரிவிப்போரின் எண்ணிக்கை, அளவிட முடியாதது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, தனது பதவியிலிருந்து றேமன்ட் மூர்ஸ் விலகும் செய்தி வெளியானது. இந்தியன் வெல்ஸ் தொடரின் உரிமையாளரான லாரி எலிஸன் வெளியிட்ட அறிக்கையில், தனது பதவியிலிருந்து விலக றேமன்ட் முடிவு செய்துள்ளதாகவும், அவரது முடிவைப் புரிந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு, பில்லே ஜீன், மார்ட்டினா நவ்ரத்திலோவா, வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் போன்ற டென்னிஸ் வீராங்கனைகள் பலரின் தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை, பெண்களை விட ஆண் டென்னிஸ் வீரர்கள், அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதாகவும், எனவே, பெண்களை விட ஆண்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட வேண்டுமெனவும், உலகின் முதன்நிலை டென்னிஸ் வீரரான நொவக் ஜோக்கோவிச்சும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X