2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆட்ட நிர்ணய சதி நிர்ப்பந்தத்தால் விலகினேன்: பாக் . விக்கெட் காப்பாளர்

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆட்டநிர்ணயம் செய்பவர்களுடன் ஒத்துழைக்குமாறு தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ஸுல்கர்னைன் ஹைதர், சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணியினர் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து தலைமறைவான ஹைதர் பின்னர் லண்டனை சென்றடைந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் தென்னாபிரிக்காவுடனான 4 ஆவது மற்றும் 5 ஆவது போட்டிகளின் பெறுபேறுகளை நிர்ணயம் செய்ய உதவுமாறு சிலர் தன்னை நிர்ப்பந்தித்ததாகவும் அதற்கு ஒத்துழைக்காவிட்டால் தான் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என அச்சுறுத்தப்பட்டதாகவும் ஹைதர் தெரிவித்துள்ளார்.

'நானும் எனது குடும்பத்தினரும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதால் சர்வதேச போட்டிகளிலிருந்து விலகத் தீர்மானித்தேன். மேற்படி சுற்றுப்போட்டியின்போது ஊழல் செயற்பாட்டின் ஓர் அங்கமாக இருக்கவோ அல்லது நாட்டிற்கு எதிராக செயற்படவோ விரும்பவில்லை.

அச்சுறுத்தல் குறித்து அணி நிர்வாகத்திடம் சொல்லும் அளவுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. பிரித்தானிய சட்டம் சரியாக செயற்படுபவர்களை பாதுகாக்கும் என்பதால் நான் பிரிட்டனுக்கு வரத் தீர்மானித்தேன்' என ஹைதர் கூறினார்.

பிரிட்டனில் அரசியல்தஞ்சம் கோருவதா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

'இது குறித்து நான் சிந்திக்கவும் இல்லை. சட்டத்தரணியொருவரை நியமிப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. தற்போது லாகூரிலுள்ள எனது குடும்பம் குறித்துதான் நான் கவலையடைகிறேன்' என ஹைதர் கூறினார்.

துபாயில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான 5 ஆவது ஒருநாள்  போட்டியில் ஹைதருக்குப் பதிலாக உமர் அக்மல் விக்கெட் காப்பாளராக கடமையாற்றினார். இப்போட்டியில் பாகிஸ்தான் சார்பாக அக்மல்தான் அதிக ஓட்டங்களை (60) பெற்றார். எனினும் இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் இச்சுற்றுப்போட்டியில் 3-2 விகிதத்தில் வென்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .