2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலக கிண்ண போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

Super User   / 2011 ஜனவரி 17 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் என்.ஸ்ரீனிவாசனுக்கும் தேர்வுக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து இப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான மஹேந்திரசிங் டோனி தலைமையிலான இவ்வணியில் 6 துடுப்பாட்ட வீரர்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்கள், ஒரு சகலதுறை வீரர் (யூஸுப் பதான்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இளம் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் எஸ்.ஸ்ரீசாந்த் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. சுழற்பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா வியப்புக்குரிய வகையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரும் துடுப்பாட்ட வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வினும் இவ்வணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணியின் 4 முக்கிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் ஷேவாக், கௌதம் காம்பீர், பிரவீன் குமார் ஆகியோர் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் இச்சுற்றுப்போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் குணமடைந்துவிடுவர் என்ற நம்பிக்கையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் ஏப்ரல் 2 ஆம் திகதிவரை இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து தேர்வுக்குழுத் தலைவர் கே.ஸ்ரீகாந்த் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவில் இப்போட்டி நடைபெறுகிறது. இந்திய ஆடுகளங்கள், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை என்பதால் விக்கெட்டுகளை சாய்ப்பதில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவர் எனக் கூறினார்.

வீரர்கள் விபரம்:  மஹேந்திரசிங் டோனி (தலைவர்), வீரேந்தர் ஷேவாக் (உபதலைவர்), சச்சின் டெண்டுல்கர், கௌதம் காம்பீர், வீராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஹஸீர்கான், ஆஷிஸ் நெஹ்ரா, பிரவீன் குமார், முனாவ் பட்டேல், ஆர்.அஸ்வின், பியூஸ் சாவ்லா.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .