2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போட்டி சமநிலையில் முடியும் என வோர்ன் சரியாக எதிர்வு கூறியது எப்படி? : பாக். கிரிக்கெட் சபை கேள்வி

Super User   / 2011 மார்ச் 03 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலக கிண்ண கிரிக்கெட்  போட்டி  சமநிலையில் முடிவடையும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சு நட்சத்திரமான ஷேன் வோர்ன் முன்கூட்டியே எதிர்வு கூறியமை எப்படி என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சந்தேகம் எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக எதிர்வரும் ஐ.சி.சி. நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின்  தலைவர் இஜாஸ் பட், லாகூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்படி போட்டிக்கு முன்பாக டுவிட்டர் இணையத்தளத்தில் கருத்துத் தெரிவித்த ஷேன் வோர்ன், இப்போட்டி சமநிலையில் முடிவடையும் என தான் எதிர்வு கூறுவதாக குறிப்பிட்டிருந்தார்.

அப்போட்டியில் இரு அணிகளுமே 338 ஓட்டங்களைப் பெற்றதால் அப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது. உலக கிண்ணப் போட்டிகள் சமநிலையில் முடிவடைந்த 4 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பொதுவாக, கிரிக்கெட் போட்டிகளில் எந்த அணி வெல்லும் என சரியாக எதிர்வு கூறுவது சாதாரணமானது. ஆனால் ஒரு போட்டி சமநிலையில் முடிவடையும் என அவர் சரியாக எதிர்வு கூறியது பலரை வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

இப்பெறுபேற்றை ஷேன் வோர்ன் சரியாக எதிர்வு கூறியமை குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் அன்ட்ரு ஸ்ட்ரௌஸ் உட்பட பலர் அவருக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.

ஆனால்  ஷேன் வோர்ன் இதை எப்படி முன்கூட்டியே இப்பேறுபேற்றை எதிர்வு கூறினார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கேள்வி எழுப்புகிறது.

"இப்போட்டி சமநிலையில் முடிவடையும் அவர் என எதிர்வுகூறியது மிக விசித்திரமாக இல்லையா, எதிர்வரும் ஐ.சி.சி. சபைக்கூட்டத்தில் இவ்விடயம் குறித்து கேள்வி எழுப்பப்படும்"என இஜாஸ் பட்  தெரிவித்தார்.

போட்டிகளின்போது ஸ்பொட் பிக்ஸிங் எனும் சதித்திட்டங்கள் குறித்து செய்திகள் வெளிவரும் நிலையில் ஐ.சி.சி. இவ்விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் இஜாஸ் பட் கூறியுள்ளார்.

இதேவேளை தற்போதைய உலக கிண்ணப் போட்டிகளில் ஸ்பொட் பிக்ஸிங் சதிகள் நடைபெறுகிறது என்பதில் சந்தேகமில்லை என  பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சர்பராஸ் நவாஸ் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Thilak Thursday, 03 March 2011 10:24 PM

    ஷேன் வோர்னின் எதிர்வுகூறல் ஆச்சரியமானதுதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .