2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நியூசிலாந்து அணிக்கெதிராக இலங்கை அணிக்கு அதிரடி வெற்றி

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி இலகுவான வெற்றியைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி பிரென்டன் மக்கலம், டானியன் ஃபிளின் ஆகியோர் அரைச்சதங்களின் உதவியுடன் 221 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை சார்பாக ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுக்களையும், ஷமின்ட எரங்க 3 விக்கெட்டுக்களையும், நுவான் குலசேகர 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி மஹேல ஜெயவர்தன, அன்ஜலோ மத்தியூஸ் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 247 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக ரிம் சௌதி 4 விக்கெட்டுக்களையும், ஜீதன் பட்டேல் 3 விக்கெட்டுக்களையும், ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

26 ஓட்டங்கள் பின்னிலையிலிருந்த நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை நேற்று ஆரம்பித்த நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 35 ஓட்டங்களைப் பெற்று நேற்றைய நாளை நிறைவுசெய்திருந்தது.

இன்று தொடர்ந்து ஆடும் போது தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே அவ்வணி பெற்றது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டானியல் ஃபிளின் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் மிகச்சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டுக்களையும், நுவான் குலசேகர, சுராஜ் ரந்தீவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

93 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி இவ்வெற்றி இலக்கை 18.3 ஓவர்களிலேயே அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய திமுத் கருணாரத்ன 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும், தரங்கன பரணவிதான ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாக இலங்கை அணி சார்பாக இப்போட்டியில் 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ரங்கன ஹேரத் தெரிவானார்.

இரண்டாவது போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .