2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரங்கன ஹேரத் இல்லையெனில் தடுமாறியிருப்போம்: மஹேல

A.P.Mathan   / 2012 நவம்பர் 20 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரதான பந்துவீச்சாளராக 18 வருடங்கள் விளங்கிய முத்தையா முரளிதரனின் ஓய்விற்குப் பின்பு ரங்கன ஹேரத் காணப்பட்டிருக்காவிட்டால் டெஸ்ட் அரங்கில் இலங்கை அணி தொடர்ந்து தடுமாறியிருக்கும் என இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

உலக சாதனையாளரான முத்தையா முரளிதரன் 2010ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து யாராவது ஒரு பந்துவீச்சாளர் இலங்கையின் பந்துவீச்சைத் தலைமை தாங்க வேண்டிய தேவை காணப்பட்டதாகத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, அந்தப் பணியை ரங்கன ஹேரத் மிகச்சிறப்பாகச் செய்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் ஓய்விற்குப் பின்னர் ரங்கன ஹேரத் அணியில் இடம்பெற்றுத் தனது திறமையைச் சரியாக வெளிப்படுத்தியிருக்காவிட்டால் இலங்கை அணி மேலும் 2 அல்லது 3 வருடங்கள் தடுமாற வேண்டியிருந்திருக்கும் எனத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, ஆனால் ரங்கன ஹேரத்தின் சிறப்பான பந்துவீச்சுக் காரணமாகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது எனத் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரனிற்குப் பின்பு இலங்கையில் உருவான சிறந்த சுழற்பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் காணப்படுகிறார் எனக் குறிப்பிட்ட மஹேல, ரங்கன ஹேரத்தின் கட்டுப்பாடான பந்துவீச்சுக் காரணமாக எதிரணி வீரர்களுக்கு அவர் சவாலாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு ஏனைய பந்துவீச்சாளர்கள் ரங்கன ஹேரத்திற்குத் துணையாகச் சிறப்பாகப் பந்துவீசி வருவதாகவும் மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்.

நேற்று நிறைவடைந்த நியூசிலாந்திற்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியதாகத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, நியூசிலாந்து அணி தொடர்ந்தும் போராடிய போதிலும், சிறப்பான பந்துவீச்சுக் காரணமாகவே நியூசிலாந்து அணி தடுமாறியிருந்ததாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் இடம்பெற்ற வேளையில் ரங்கன ஹேரத் முதல் இனிங்ஸில் 5 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .