2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கரீபியன் பிறீமியர் லீக்கில் பார்படோஸ் அணிக்கு வெற்றி

A.P.Mathan   / 2013 ஜூலை 31 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரீபியன் பிறீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் பார்படோஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. சென் லூசியா அணிக்கெதிரான போட்டியில் பார்படோஸ் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
 
பார்படோஸில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பார்படோஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் தடுப்பெடுத்தாடிய பார்படோஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
 
போட்டியின் முதலாவது பந்திலேயே டுவைன் ஸ்மித் ஆட்டமிழந்ததோடு, ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களுடன் அவ்வணி தடுமாறிக் கொண்டிருந்த போது, 5ஆவது விக்கெட்டுக்காக சொய்ப் மலிக், கெரான் பொலார்ட் இருவரும் 88 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
 
இறுதி நேரத்தில் கெரான் பொலார்ட் அதிரடியாக ஆட பார்படோஸ் அணி சிறப்பான நிலையை அடைந்தது.
 
துடுப்பாட்டத்தில் பார்படோஸ் அணி சார்பாக சொய்ப் மலிக் 51 பந்துகளில் 78 ஓட்டங்களையும், கெரான் பொலார்ட் 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் சென் லூசியா அணி சார்பாக டெரன் சமி 2 விக்கெட்டுக்களையும், அல்பி மோர்க்கல், ஷேன் ஷிலிங்பேர்ட், ரீனோ பெஸ்ற் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென் லூசியா அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
 
முதலாவது விக்கெட்டுக்காக 5.1 ஓவர்களில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்ட போதிலும், தொடர்ந்து வந்த வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்கத் தவற, அவ்வணி தடுமாறியது.
 
துடுப்பாட்டத்தில் சென் லூசியா அணி சார்பாக அன்ட்ரூ பிளெற்சர் 41 பந்துகளில் 57 ஓட்டங்களையும், டெரன் சமி 16 பந்துகளில் 35 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 14 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் பார்படோஸ் அணி சார்பாக கெரான் பொலார்ட் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஆஷ்லி நேர்ஸ், றயாட் எம்றிற், ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
 
இப்போட்டியின் நாயகனாக சொய்ப் மலிக் தெரிவானார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .