2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உஸ்மான் கவாஜாவின் ஆட்டமிழப்புத் தொடர்பாக அவுஸ்திரேலியா விளக்கம் கோரியது

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3ஆவது ஆஷஷ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வீரர் உஸ்மான் கவாஜா ஆட்டமிழப்பு வழங்கப்பட்டமை தொடர்பான விளக்கத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கோரியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையிடம் இந்தக் கோரிக்கையை அச்சபை விடுத்துள்ளது.
 
கிறேம் ஸ்வானின் பந்துவீச்சில் மற் பிரயரிடம் பிடிகொடுத்து உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்தார் என கள நடுவர் ரொனி ஹில் தீர்ப்பு வழங்கியபோது, அந்தத் தீர்ப்பிற்கு எதிராக மூன்றாவது நடுவரிடம் உஸ்மான் கவாஜா முறையிட்டார்.
 
மறு ஒளிபரப்புகளின் போது உஸ்மான் கவாஜாவின் துடுப்பில் பந்து பட்டிருக்கவில்லை எனத் தெளிவாகக் காணப்பட்ட போதிலும், மூன்றாவது நடுவரான குமார் தர்மசேனவுடன் கலந்துரையாடிய ரொனி ஹில், தனது தீர்ப்பை மாற்றிக் கொள்ளாமல், உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்ததாகவே தீர்ப்பு வழங்கினார்.
 
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, உஸ்மான் கவாஜாவின் குறித்த ஆட்டமிழப்புத் தொடர்பான விளக்கத்தை சர்வதேச கிரிக்கெட் சபையிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
 
தங்களது பார்வையில் கள நடுவரின் தீர்ப்பும், மூன்றாவது நடுவரிடம் முறையிட்ட பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பும் தவறானவை எனத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, தாங்கள் தொடர்ந்தும் நடுவர் மீள்பரிசீலனைத் திட்டத்தின் ஆதரவாளர்களாகக் காணப்படுவதாகவும், நடுவர் மீள்பரிசீலனைத் திட்டத்தில் கிரிக்கெட் நம்பிக்கை கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
 
தவறுகள் மேற்கொள்ளப்படலாம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, ஆனால் இந்தத் தடவை இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கோருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X