2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தியாவைத் தோற்கடித்தது அவுஸ்திரேலியா

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இத்தொடரில் அவ்வணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மொஹாலியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.

14 ஓட்டங்களுக்கே முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களுடனும் தடுமாறியது. எனினும் பின்னிலை வீரர்களுடன் அணித்தலைவர் மகேந்திரசிங் டோணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக மகேந்திரசிங் டோணி 121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களையும் விராத் கோலி 73 பந்துகளில் 68 ஓட்டங்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 35 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிற்சல் ஜோன்சன் 4 விக்கெட்டுக்களையும் கிளின்ட் மக்காய், ஷேன் வொற்சன், ஜேம்ஸ் ஃபோள்க்னர், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

304 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முதலாவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களைப் பகிர்ந்தபோதிலும், அதன் பின்னர் 3 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களுடன் அவ்வணி தடுமாறியது. 4ஆவது விக்கெட்டுக்காக 83 ஓட்டங்கள் பகிரப்பட்டபோதிலும், அதன் பின்னர் அவ்வணி விக்கெட்டுக்களை இழந்து, 41.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களுடன் தடுமாறியது. எனினும் சிறப்பாக ஆடிய ஜேம்ஸ் ஃபோள்க்னர் 48ஆவது ஓவரில் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் 30 ஓட்டங்களைக் குவித்ததோடு, இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட, 3ஆவது பந்தை ஆறு ஓட்டங்களுக்கு விளாசி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக அடம் வோகஸ் 88 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும் ஜேம்ஸ் ஃபோள்க்னர் 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும் ஜோர்ஜ் பெய்லி 60 பந்துகளில் 43 ஓட்டங்களையும் ஆரொன் ஃபின்ச் 44 பந்துகளில் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வினய் குமார் 2 விக்கெட்டுக்களையும் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் ஃபோள்க்னர் தெரிவானார்.

You May Also Like

  Comments - 0

  • ரபீக் Sunday, 20 October 2013 07:06 AM

    இந்திய போலர்கள் அனைவரையும் உடனே வீட்டுக்கு தயவுசெய்து அனுப்புங்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .