2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
 
டுனேடினில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி றொஸ் ரெய்லரின் 217 ஓட்டங்கள், பிரென்டன் மக்கலத்தின் 113 ஓட்டங்கள், ஹேமிஷ் றதர்ஃபோர்ட்டின் 62 ஓட்டங்கள், பீற்றர் ஃபுல்ற்றனின் 61 ஓட்டங்கள், பி.ஜே.வற்லிங்கின் 41 ஓட்டங்களின் துணையோடு 9 விக்கெட்டுக்களை இழந்து 609 ஓட்டங்களைப் பெற்றது.
 
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ரீனோ பெஸ்ற் 3 விக்கெட்டுக்களையும், டெரன் சமி, நர்சிங் டியோநரைன் இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும், ஷேன் ஷிலிங்பேர்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஷிவ்நரின் சந்தர்போலின் 76 ஓட்டங்கள், டெரன் பிராவோவின் 40 ஓட்டங்களின் துணையோடு 213 ஓட்டங்களைப் பெற்றது.
 
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ரிம் சௌதி 4 விக்கெட்டுக்களையும், ட்ரென்ட் போல்ட்ற் 3 விக்கெட்டுக்களையும், இஷ் சோதி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
 
ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சர்பாக டெரன் பிராவோ 218 ஓட்டங்களையும், டெரன் சமி 80 ஓட்டங்களையும், கேர்க் எட்வேர்ட்ஸ் 59 ஓட்டங்களையும், நர்சிங் டியோநரைன் 52 ஓட்டங்களையும் பெற அவ்வணி 507 ஓட்டங்களைப் பெற்றது.
 
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக நீல் வக்னர் 3 விக்கெட்டுக்களையும், ரிம் சௌதி, ட்ரென்ட் போல்ட்ற், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கொரே அன்டர்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
112 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது மழை குறுக்கிட்டதோடு, அதன் பின்னர் போட்டி ஆரம்பிக்கப்படவில்லை.
 
மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக வீழ்த்தப்பட்ட 4 விக்கெட்டுக்களையும் ஷேன் ஷிலிங்பேர்ட் வீழ்த்தினார்.
 
இப்போட்டியின் நாயகனாக றொஸ் ரெய்லர் தெரிவானார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .