2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கடந்தவார களங்கள்... (நவம்பர் 21 – 26)

A.P.Mathan   / 2011 நவம்பர் 26 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணிக்கு தொடர்ச்சியான தோல்விகள்

இருபதாம் திகதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்களை பெற, இலங்கை அணி இலகுவாக வெற்றி பெறும் என எதிர்பார்த்து இருக்க - இலகுவான தோல்வியை சந்தித்தது. 174 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. சஹிட் அப்ரிடி தனித்து பாகிஸ்தானுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார் என்று சொல்ல கூடிய போட்டி அது. 75 ஓட்டங்களை பெற்றதோடு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக்கொண்டார்.

அடுத்து 23ஆம் திகதி அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை பெற, 3 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுக் கொண்டது. இந்த போட்டியுடன் ஒருநாள் போட்டி தொடர் நிறைவடைய, பாகிதான் அணி தொடரை 4 இற்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றிக் கொண்டது. சஹிட் அப்ரிடி தொடர் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இலங்கை அணி தரப்படுதலில் 2ஆம் இடத்தை இழந்து 4ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட ஓர் இடம் முன்னேறி பாகிஸ்தான் அணி 5ஆம் இடத்துக்கு வந்தது. இறுதியாக  T20 போட்டியிலாவது இலங்கை அணி வெற்றி பெறும் என்று இருந்தவர்களுக்கு அதுவும் ஏமற்றமாகவே முடிந்தது. இலங்கை அணி 141 ஓட்டங்களை பெற்ற நிலையிலும் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே கைப்பற்றிய நிலையிலும் -இலங்கை அணியினர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை வந்தது. இலங்கை அணியின் இறுதி நேர பந்து வீச்சு மோசமாக அமைய அப்ரிடி, மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு தோல்வியை தந்தது.

தென்னாபிரிக்க சுற்றுலா

தென் ஆபிரிக்காவிற்கு செல்லும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாற்றங்களை தெரிவுக்குழு முயற்சி செய்து இருக்கிறது. இந்த வீரர்கள் செய்து காட்டுவார்களா? திலான் சமரவீரவிற்கு தற்போதைய தெரிவுகுழுவின் அணியில் இனி இடம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இளவயது வீரர்களுக்கு இடம் வழங்க - அவர் நிறுத்தப்பட்டுள்ளார். அஜந்த மென்டிஸ் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். சுராஜ் ரந்திவிற்கு இடம் இல்லை. டில்ஹாரா பெர்னாண்டோ நீண்ட நாளைக்கு பிறகு டெஸ்ட் அணியில் சேர்த்துக்கொள்ளபட்டுள்ளார். பிரசன்னா ஜெயவர்தன உபாதைக்குள்ளாகியிருப்பதால் கௌஷால் சில்வா குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தொடரில் விளையாடிய சில வீரர்கள் தங்கள் வாய்ப்பை இழந்துள்ள அதே வேளை சில வீரர்கள் வாய்ப்புகளை பெற்றுள்ளார்கள். இதேவேளை தென் ஆபிரிக்க தொடர் வரையுமே டில்ஷான் - அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த தொடருக்கு பின் தான் தலைவராக நியமிக்கப்படுவேனா? இல்லையா? என்பது தெரிவுக்குழுவின் கையிலேயே இருப்பதாக தெரிவித்த டில்ஷான் தன் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதற்கு முதல் ஒரு தொடருக்காவது அணித் தலைவராக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்க தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி விபரம் - 
Tillakaratne Dilshan (capt), Angelo Mathews (vice-capt), Tharanga Paranavitana, Kumar Sangakkara, Mahela Jayawardene, Dinesh Chandimal, Kaushal Silva (wk), Lahiru Thirimanne, Dimuth Karunaratne, Chanaka Welegedara, Dilhara Fernando, Nuwan Pradeep, Suranga Lakmal, Thisara Perera, Ajantha Mendis, Rangana Herath


இந்திய அணியின் ஏறுமுகம்

இந்திய அணி இலகுவான முறையில் டெஸ்ட் தொடரை இரண்டிற்கு பூச்சியம் என்ற ரீதியில் கைபற்றிக்கொண்டது. மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்பாராத விறுவிறுப்பை தந்தது. டெஸ்ட் போட்டிகளிலும் இறுதி பந்தில் விறுவிறுப்பு இருகின்றது என்பதை நிரூபித்தது அந்தப் போட்டி. 2 பந்துகளில் 2 விக்கெட்டுகள் போனால் மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி. 2 ஓட்டங்கள் கிடைத்தால் இந்திய அணிக்கு வெற்றி. இறுதியில் 1 பந்தில் 2 ஓட்டங்கள் தேவை. 1 ஓட்டம் பெறப்பட போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்தது. இந்த போட்டி முழுக்க
பேசப்பட்டவர் தமிழ் நாட்டின் ரவிச்சந்திரன் அஷ்வின். முரளிக்கு பின் ஒரு தமிழ் வீரர் சர்வதேச அரங்கில் பேசப்பட ஆரம்பித்து இருக்கிறார் என்பது தமிழருக்கு பெருமை என்று சொல்லலாம். இது தொடர அஷ்வினுக்கு வாழ்த்துகள். இந்த போட்டியின் நாயகனாகவும் தொடரில் 121 ஓட்டங்களையும் 22 விக்கெட்களையும் பெற்று தொடரின் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார் அஷ்வின்.

முதல் இன்னிங்ஸ்சில் மே.தீவுகள் 590 ஓட்டங்களை பெற இந்திய அணி 482 ஓட்டங்களை பெற்றது. இந்த நிலையில் நிச்சயமான சமநிலை முடிவு என எதிர்பார்க்க - மே.தீவுகள் 134 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழக்க இந்திய அணிக்கு வெற்றி பெறும் எதிர்பார்ப்பு உருவானது. கரணம் 243 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. போட்டி நேரத்தில் இரண்டு பக்க வாய்ப்புகளும் மாறி மாறி ஏற்பட்டு இறுதியில் சமநிலையாக மாறியது.

டோனிக்கும் சச்சினுக்கும் ஓய்வு

டோனிக்கும் சச்சினுக்கும் மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ஓய்வு வழங்கப்பட்டு, சேவாக் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். யுவராஜ் சிங்கிற்கு நுரையீரல் உபாதை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை தாண்டி மிக பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. இந்த நிலையில் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக இருக்க போகும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அஷ்வினின் அபார டெஸ்ட் அறிமுகமும் பிரக்ஜன் ஓஜா வின் சிறந்த பந்து வீச்சு பெறுபேறும் ஹர்பஜன் சிங்கின் இடத்தை முழுமையாக இல்லாமல் செய்து விட, விராத் கோலியின் சிறப்பான துடுப்பாட்டம் அவருக்கு ஓர் இடத்தை கொடுக்க - சுரேஷ் ரெய்னாவின் இடம் பறிபோய்விட்டது.

யுவராஜின் உபாதையும் அண்மைக்கால பெறுபேறும் அவரையும் அணியை விட்டு வெளியேற்றி இருக்கிறது. ஆனால் ரோஹித் ஷர்மாவிற்கு குழுவில் இடம் கிடைத்துள்ளது. சஹீர் கான் உள்ளூர் ரஞ்சி கிண்ண போட்டியில் விளையாடி உடல் தகுதியை முழுமையாக நிருபித்தால் அவுஸ்திரேலியாவிற்கு செல்வார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான அணி விபரம் –
Virender Sehwag (capt), Gautam Gambhir, Virat Kohli, Parthiv Patel (wk), Ajinkya Rahane, Manoj Tiwary, Suresh Raina, Rohit Sharma, Ravindra Jadeja, R Ashwin, Varun Aaron, Umesh Yadav, Rahul Sharma, Praveen Kumar, Vinay Kumar

அவுஸ்திரேலிய செல்ல இருக்கும் டெஸ்ட் அணி -  
MS Dhoni (capt &wk), Virender Sehwag, Gautam Gambhir, Rahul Dravid, Sachin Tendulkar, VVS Laxman, Virat Kohli, R Ashwin, Ishant Sharma, Umesh Yadav, Varun Aaron, Rohit Sharma, Pragyan Ojha, Praveen Kumar, Ajinkya Rahane, Wriddhiman Saha, Zaheer Khan


நியூசிலாந்துக்கு எதிரான அவுஸ்திரேலிய அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உபாதைகள் காரணமாக முக்கியமான வீரர்களும் அண்மைக்காலமாக பிரகாசித்த வீரர்களும் அணியில் இருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டது. மிச்சேல் ஜோன்சன், ஷேன் வொட்சன், பற்றிக் கம்மின்ஸ், ரயன் ஹரிஸ், ஷோன் மார்ஷ் ஆகியோரே அவர்கள். இவர்கள் இல்லாத இந்த அணியில் அதிரடியில் அண்மைக்கால அவுஸ்திரேலிய ஹீரோ டேவிட் வோர்னர் - டெஸ்ட் வாய்ப்பை பெற்றுக்கொள்ள பந்து வீச்சில் பீட்டர் சிடேலும் தனக்கான இடத்தை பெற்றிருக்கிறார். இன்னும் சிலருக்கான வாய்ப்புக்களும் கிடைத்துள்ளன. தங்கள் நாட்டில் போட்டி நடைபெறுவதால் புதிய வீரர்களுடன் அவுஸ்திரேலியா சமாளித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

அவுஸ்திரேலிய அணி விபரம் -
Michael Clarke (capt), David Warner, Phillip Hughes, Usman Khawaja, Ricky Ponting, Michael Hussey, Brad Haddin (vice-capt, wk), Peter Siddle, Ben Cutting, Nathan Lyon, Mitchell Starc, James Pattinson.


அவுஸ்திரேலிய அணியின் புதிய பயிற்றுவிப்பாளர்

அவுஸ்திரேலியா அணியின் பயிற்றுவிப்பாளராக தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மைக்கி ஆர்தர் நியமிக்கப்படுள்ளார். 2015ஆஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டித் தொடர் வரை இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரே வெளிநாடொன்றில் பிறந்த முதலாவது அவுஸ்திரேலியா பயிற்றுவிப்பாளர் ஆவார். 68ஆம் ஆண்டு பிறந்த இவர், தென் ஆப்ரிக்காவின் எந்த ஒரு தேசிய அணியிலும் விளையாடியது இல்லை. 110 முதல் தர போட்டிகளில் மாத்திரம் விளையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அணி திறமையான அணி எனவும் அந்த அணிக்கு பயிற்சியளிக்க கிடைத்தமை தனக்கு பெருமை எனவும் மைக்கி ஆர்தர் சொல்லியுள்ளார். ஸ்டீவ் ரிக்சன், டொம் மோடி, ஜஸ்டின் லங்கர் ஆகியோருடன் போட்டியிட்டே இந்த பதவியை பெற்று  கொண்டார். 2005ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை தென் ஆபிரிக்க பயிற்றுவிப்பாளராக இருந்து, பின் மேற்கு அவுஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளராக அவர் பதவி பெற்ற காலத்தில் இருந்து - அவுஸ்திரேலியாவின் கண் ஆர்தர் மீது இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பயிற்றுவிப்பாளராக மட்டுமல்லாமல் தெரிவாளரகவும் பிராந்திய மட்டத்திலான திறமைகளை இனம் கண்டு அவுஸ்திரேலிய தேசிய அணிக்கு வீரர்களை உருவாக்குவதற்குமான பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .