2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

”அரசியல்வாதிகளை நம்பமாட்டேன்”

Editorial   / 2018 ஜூன் 27 , மு.ப. 08:49 - 1     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

சட்டமா அதிபர் திணைக்களத்தில், அரசியல் கைக்கூலிகளாக இருப்பவர்களுக்குத் தீர்ப்பை மாற்றமுடியுமெனத் தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், “கடந்த அரசாங்கத்திலும், இந்த ஆட்சியிலும் நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.

அந்தப் பாடங்களின் அடிப்படையில், எந்தவோர் அரசியல்வாதியையும் நான் நம்பமாட்டேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

“2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, எந்தவோர் அரசியல்வாதி​யையும் நான் நம்பமாட்டேன். 1959ஆம் ஆண்டு புத்தசாசன ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மதம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக, தலதா மாளிகை மீது சத்தியம் செய்பவர்களுக்கே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஆதரவளிப்பேன்” என்றும் அவர் தெரிவித்தார். நாவல வீதி, இராஜகிரியவில் உள்ள, பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று (26) நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

“என்னைச் சிறைக்கு அனுப்பி, எனக்கு ‘ஜம்பர்’ அணிவித்துப் பார்ப்பதற்கான முயற்சி, இன்று, நேரற்றல்ல, 2010ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளிலும் முன்னெடுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழே, நான் சிறைக்குள் அனுப்பப்பட்டேன்” என்று தெரிவித்த ஞானசார தேரர், “சிறையிலிருந்த ஐந்து நாட்களும் ஜம்பர் அணியவில்லை” என்றார்.

“வௌ்ளையர்கள் கொண்டுவந்த சட்டத்தின் கீழே, சிறைக் கைதிகளுக்கு ஜம்பர் அணிவிக்கப்படுகின்றது என்றபோதிலும் அந்த ஜம்பரை நான் அணியவில்லை. சிறைச்சாலை அதிகாரிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, காவியுடையைக் கழற்றிவிட்டு, சிறைக்கூண்டுக்குள்​ளே, சாரத்துடனும், தோளில் துண்டுடனும் இருந்தேன்” என்றார்.

“இ​ரத்தினபுரியில், கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, நான் ஒரு தகவலை தெரிவித்திருந்தேன். அதாவது, என்னைச் சிறைக்கு அனுப்புவதில் இரு அமைச்சர்களும், அவருக்கு மேலாக இருக்கும் ஒருவரும் முயற்சி செய்வதாகவும் தெரிவித்திருந்தேன். ஆகக் குறைந்தது 6 மாதங்களுக்காவது எனக்கு ‘ஜம்பர்’ அணிவிக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன என்றேன்.

“அதே​போல், சிறைக்குள் என்னை அனுப்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரும் எனக்குத் தகவல் கிடைத்தது. எனினும், நம்பிக்கையுடன் நீதிமன்ற வளாகம் வரை சென்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

“என்னை சிறையிலடைத்த பொறுப்பை, கட்டாயமாக இந்த அரசாங்கமே ஏற்கவேண்டும். சுயாதீனமாக செயற்படுவதற்கு நீதிமன்றங்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை” என்று தெரிவித்த அவர், “விசேடமாக அரச சார்பற்ற நிறுவனங்களான தமிழ் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிக்கும், ​சிங்கள பௌத்தர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தூதுவராலயங்களுடன் இணைந்தே, இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

“அதுமட்டுமன்றி, சர்வதேசத்துக்குத் துணை போகும் அரச சார்பற்ற அமைப்புகளின் கையாட்களாக, சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள் செயற்படும், அடியாட்களின் அபிப்பிராயங்களுக்கு அமையவே, அநீதியான தீர்ப்புகள் வழங்கப்படுவதாக நான் நம்புகின்றேன்” என்றார்.

அத்துடன், தன்னைச் சிறையிலடைக்க உதவிய பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்குப் பதவி உயர்வும் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் மூலம் நீதிமன்றின் செயற்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளதென தெரிவித்த அவர், “ஞானசாரருக்கு இவர்கள் ஒரு நாளாவது ஜம்பர் அணிவிக்க ஆசைப்பட்டனர். ஆனால், நிறைவேறவில்லை” என்றார்.

“பாதாள குழுக்களைப் பாதுகாத்து, திருடர்களைப் பாதுகாக்கும் இரண்டு முக்கிய அமைச்சர்களும், இவர்களுக்குத் தலைவராக இருப்பவரும், சட்டமா திணைக்களத்தின் அதிகாரிகளும் இணைந்து நீதிமன்றத்துக்கு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு, நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்பட இடமளிக்காமல், நீதிமன்றம் ஊடாக அழுத்தங்களைப் பிரயோகித்தே இவ்வாறான துரோகத்தைக் காவி உடைக்குச் செய்துள்ளனரென நாம் எண்ணுகின்றோம்” என்றார்.

“நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை மாற்றும் பலம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாகச் செயற்படுபவர்களுக்கே இருக்கிறது. எனவே, எமது பிரச்சினைகளைத் தெரிவிக்க சீனிகம தேவாலயமும், காளி கோவிலுமே உள்ளது. அங்கு சென்று சிதறுதேங்காய் அடித்துதான், எமது பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும்” என்றார்.  தான் இனியொரு போதும் எந்தவோர் அரசியல்வாதியையும் நம்பப் போவதில்லையென்று தெரிவித்த அவர், “தலதா மாளிகையின் மீது சத்தியம் செய்பவ​ருக்கே, 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவளிப்பேன்” என்றார்.


You May Also Like

  Comments - 1

  • தேவா Wednesday, 27 June 2018 10:39 AM

    ஒரு துறவி (!!) ஏன் அரசியல்வாதியை நம்ப வேண்டும்? நீதிமன்றத்தின் முன்னுள்ள ஒரு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எவரையேனும் அவமதிப்பது சட்டவிரோதமல்ல என்று கூறும் சட்டம் கற்றவர் எவரையாவது இவர் காட்டுவாரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .