2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'குற்றம் சுமத்தப்பட்டவர்கள்மீது வழக்குப் பதியப்படவில்லை'

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்மீது, இதுவரை எந்தவித வழக்கும் தொடரப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசனம் தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பு, இன்று (14) காலை, கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐநா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டிருக்கும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளுக்குத் தாங்கள் முகங்கொடுக்கத் தாயார் எனவும், முன்னாள் ஆணையாளர்கள் போன்று, தற்போதைய ​ஆணையாளரும் தங்களுக்கு ஆதரவு வழங்கும் விதத்திலான ​கோரிக்கை ஒன்றை இம்மாதம் 25ஆம் திகதி, ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மனிதஉரிமைகள் 

அடுத்தவாரம் அமெரிக்க செல்லும்போது, புதிதாகப் பதவியேற்றுள்ள ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளரைச் சந்தித்து, இலங்கை மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பற்றிய தௌிவை அவருக்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

கடந்த காலங்களிலும் இலங்கை தொடர்பான தவறான புரிதலை ஐநா மனிதஉரிமைகள் ஆணைக்குழு கொண்டிருந்ததாகவும் அதனைத் தகுந்த விளக்கமளித்தலூடாக விலக்கிக்கொள்ள முடிந்ததாகவும் தெரிவித்த ஜனாதிபதி, 25ஆஆம் திகதி ஆற்றவுள்ள உரையில் பல முக்கிய தௌிவுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

நீதிமன்றத்தினால் தண்டனைக்குட்படுத்திய முன்னாள் போராளிகளையும் விசாரணை நிலுவையிலுள்ள போராளிகளையும் விடுதலை செய்யுமாறு மனிதஉரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த விடயத்திலுள்ள சிக்கல்களைத் தௌிவுபடுத்தவுள்ளதாகவும் கூறினார்.

விசாரணைகள்

நேற்று (13) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்ட தகவலின்படி, இதுவரை காலமும் விசாரணைக்குள்ளாகிய லசந்த கொலை, கீத்​நொயர் கடத்தல் விவகாரம், 11 இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் போன்ற பல்வேறு விசாரணைகள், தொடர்ந்தும் விசாரணை மட்டத்திலேயே இருப்பதாகவும், இவற்றில் ஒன்றைத்தானும் வழக்குத் தாக்கல் செய்யும் நிலைக்குக் கொண்டுவரவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். ​குற்றப் புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம், முப்படைகளின் பிரதானி தொடர்பான விசாரணை, வெறும் குற்றச்சாட்டளவில் மாத்திரமே இருப்பதாகவும் அதனைப் பெரிதுபடுத்திப் பேசப் பலர் விளைந்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

தன்னைப் பொறுத்தவரையில் பாரிய குற்றச் செயல்களின் ஈடுபட்டவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே எனவும், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதன் ஊடாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே எனவும் தெரிவித்த ஜனாதிபதி, வெறும் குற்றச்சாட்டுக்குள்ளாகி விளக்கமறியலில் இருப்பவர்கள் குற்றவாளிகளாகிவிட முடியாதவர்களே என்றும் தெரிவித்தார்.

எரிபொருள் சூத்திரம்

உலக நியதிக்கமைய எரிபொருள் சூத்திரத்தை உருவாக்கியபோதிலும் துரதிர்ஷ்டவசமாக எரிபொருள் விலை அதிகரித்துச் செல்வதாகக் கூறிய ஜனாதிபதி, இந்த விடயத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின்போதும் இந்த விடயம் தொடர்பில் கூடிய கவனஞ்செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மகாவலி திட்டம்

வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் விவகாரத்தை மறுப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மகாவலி எல் வலயத்துக்குட்பட்ட வெலிஓயா பகுதியில் 80ஆம் ஆண்டளவில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் மாத்திரமே வாழ்வதாகவும், வேறெந்தக் குடியேற்றமும் இடம்பெறவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .