2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

Editorial   / 2018 ஜனவரி 29 , மு.ப. 03:49 - 1     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், இன அழிப்புக்கு இணையானது” என, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.  

இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பகுதியில், ஐ.நா அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு மேலாளராகக் கடமையாற்றிய பெஞ்சமின் டிக்ஸ் என்பவரே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.   

2004 முதல் 2008ஆம் ஆண்டுவரையான 4 ஆண்டுகள் பணியாற்றிய இவர், அங்கு நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.   புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான டிக்ஸ், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கிடையே அவர் பிடிஐ செய்தியாளரிடம் வழங்கிய செவ்வியின் போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.   

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,   

“இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, இரு தரப்பினரும் நிகழ்த்திய குற்றங்கள் மிகக் கொடூரமானவை. குறிப்பாக, இராணுவத்தின் செயல்கள் போர்க் குற்றத்துக்கு நிகரானவை. இன்னும் சொல்லப்போனால், இன அழிப்புக்கு இணையானவை. இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்துள்ளது.  

“ஆனால், தமிழர்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்தி உள்ளோம் என்பதை, இராணுவம் ஏற்க மறுக்கிறது. தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாக கூறிக்கொள்கிறது. தமிழர்களைப் பொறுத்தவரை, அது விடுதலை அல்ல, அவர்களுக்கான பேரழிவு.  

“போர் ஓய்ந்த பிறகும், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்களது அடையாளம் மற்றும் வரலாறு ஆகியவற்றை அழிக்கும் பணியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால், முன்பைவிட இப்போது நிலைமை சற்றுப் பரவாயில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர், 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 1

  • வைக்கி Tuesday, 30 January 2018 03:17 AM

    இந்த செய்தி Daily Mirror ரில் இல்லை. ஊடக தர்மம்??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .