2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'பயங்கரவாதிகளை அழிப்பதற்காகவே யுத்தம்; கோட்டா அறியாமல் பேசுகிறார்’

Editorial   / 2019 ஒக்டோபர் 18 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

நிலத்தை மீட்கும் நோக்கில் தான் யுத்தம் செய்யவில்லை என்றும் பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் நோக்கிலேயே தான் திட்டங்களை வகுத்து யுத்தத்தை வழிநடத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,“முன்னதாக நிலத்தை மீட்கும் நோக்கத்தில் தமிழீழ விடுதலை புலிகளுடன் எமது இராணுவத்தினர் யுத்தம் செய்து நிலத்தை கைப்பற்றினர். எனினும், பின்னர் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தி இராணுவத்தினரிடம் இருந்து மீண்டும் நிலப்பகுதிகளை கைப்பற்றினர். இவ்வாறான நிலையில், நிலத்தை மீட்கும் நோக்கில் யுத்தம் செய்து அதனை மீண்டும் இழப்பதைவிட, பயங்கரவாதிகளை முழுமையாக அழித்தால் மாத்திரமே மீட்கப்படும் நிலத்தை பாதுகாக்க முடியும் என்று நினைத்தேன்”என்றார்.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை அவதானித்து அவர்களை எதிர்கொள்ளும் வகையில் இராணுவத்தை வலுப்படுத்த முடிந்தமையாலேயே யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடிந்தது. 35 ஆயிரம் விடுதலை புலிகளில் யுத்தத்தின்போது 23 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 12 ஆயிரம் பேர் சரணடைந்தனர்.” என்றார்.

“இராணுவத்தில் இணைந்து 35 வருடங்கள் கடமையாற்றியதால் பாதுகாப்பு தொடர்பான தெளிவான விளக்கம் எனக்கு உண்டு. ஆனால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு இல்லை. 20 வருடங்கள் இராணுவத்தில் கடமையாற்றிய நிலையில், தனிப்பட்ட காரணம் என, கூறி இராணுவத்தில் இருந்து விலகி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.

“யுத்தம் தீவிரமடைந்த 15 வருடங்கள் அவர் விடுமுறைக்கு கூட நாட்டு பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. நாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூட வெளியிடவில்லை. தனது சகோதரர் ஜனாதிபதியான பின்னர் நாடு திரும்பி பாதுகாப்பு செயலாளராகிவிட்டார்.

“யுத்தத்தை பாதுகாப்பு செயலாளரான தானே வழிநடத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறுவது தவறான விடயம்.  யுத்தத்தை நானே வழிநடத்தினேன். மாற்று திட்டங்களை வகுத்து யுத்தத்தை வெற்றிக்கொள்ள போராடினேன. 

“யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, முன்னாள்  பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜக்ஷ ஒரு முறை மாத்திரமே ஆலோசனையொன்றை கூறினார். எனினும், அவர் கூறிய விடயத்துக்கு தேவையேற்படாத நிலையில் அதனை செய்யப்படுத்த அவசியம் ஏற்படவில்லை. 

“யுத்தத் திட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தேன். பாதுகாப்பு சபை கூட்டங்களில் கூட முழுமையான விடயங்களை கூறவில்லை. அவ்வாறு கூறினால் ஊடகங்களில் வெளிவந்து திட்டம் சீர்குலைந்துவிடும். ஒரு வாரத்துக்குரிய விடயங்களை மாத்திரம் நான் தெளிவுப்படுத்தினே்.

“இராணுவத்தினருக்கு கூட எனது நோக்கம் மற்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கை தெரியாது. நாங்கள் வழங்கிய உத்தரவுகள் ஆவணப்படுத்தப்படவில்லை. தனிப்பட்ட முறையில் திட்டங்களை வைத்திருந்து செயற்படுத்தியமையாலேயே யுத்தத்தை வெற்றிக்கொள்ள எம்மால் முடிந்தது.

" 5 இலட்சம் படைவீரர்களை கொண்டு யுத்தத்தை நடத்தியதாலேயே வெற்றிப்பெற்றதாக கோட்டாபய இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளார். உண்மையில் அவ்வளவு வீரர்கள் எம்மிடம் இருக்கவில்லை. நான் இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற போது, 1 இலட்சத்து 10 ஆயிரம் இராணுவத்தினர் இருந்தனர். அதனை நான் இரண்டு இலட்சமாக அதிகரித்தேன். கடற்படை, விமானப்படை, பொலிஸார் உள்ளிட சுமார் 3 இலட்சம் வீரர்களே போரில் ஈடுபட்டிருந்தனர். எனினும், 5 இலட்சம் என்றே கோட்டாபய இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றார்”. என்றார். 

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தன் மீது நம்பிக்கை வைத்து பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சராக தன்னை நியமிப்பதாக பொதுமக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

“அவ்வாறு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில், நாட்டு மக்கள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழும் நிலையை நிச்சயமாக நான் உருவாக்குவேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X