2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொங்கி எழுந்தார் மைத்திரி

Editorial   / 2018 ஜனவரி 17 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவையில் கடும்சொற்போர்

ஒரு மணி​நேரம் மைத்திரி மாயம்

சமாதானப் படுத்தி அழைத்துவந்தார் ரணில்

அழகன் கனகராஜ்

​வாராந்த அமைச்சரவைக் கூட்டம், கடுமையாக சூடுபிடித்திருந்த நிலையில், கடுமையாக கோபம்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து எழுந்துச்சென்றுவிட்டதாக, ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான சீற்றத்துடன் தன்னுடை அக்கிராசனத்திலிருந்து எழுந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோபித்துக்கொண்டு எழுந்துச் சென்றுவிட்டார்.

கோபத்துடன் எழுந்துச்சென்ற  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உடனடியாகவே குதித்துள்ளார்.

கோபித்துக்கொண்டு போன ஜனாதிபதியை, அமைச்சரவைக் கூட்டத்துக்கு திரும்பவும்  அழைத்துவருவதற்கு, பிரத​மர் பெரும் சிரமப்பட்டாரெனவும் அந்தத் தகவல் தெரிவித்தது.

இந்நிலையில், கடுமையான பிரயத்தனத்துக்கு பின்னரே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு மணிநேரத்துக்கு பின், அமைச்சரவைக்கு அழைத்து வந்தாரென அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலக காரியாலயத்தில் நேற்றுக்காலை ஆரம்பமானது.

அமைச்சரவை ஆரம்பிப்பதற்கு முன்னமே சற்று சலசலப்பாக இருந்துள்ளது. இந்நிலையில், அமைச்சரவைக்கு தலைமையேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேடமாக கருத்துரைத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் தன்னை தூற்றுவதாக குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி, தனக்குத் தெரியாமல் அரசாங்கம் சில தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் தன்னுடைய கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

அதிருப்தியை தெரிவித்த அவர், உடனடியாக எழுந்து அமைச்சரவையிலிருந்து வெளியேறியும் விட்டார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் பின்னாலேயே ஓடிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களும், ஜனாதிபதியை சமாதானப்படுத்தி அழைத்துவருவதற்கு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதனால், அமைச்சரவைக்கூட்டம் ஒரு மணிநேரத்துக்கு ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஜனாதிபதியை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரும் ஈடுபட்டதாக அந்தத் தகவல் தெரிவித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால, அமைச்சரவையில் நேற்று ஆற்றிய சிறப்புரையில், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பில், நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாதொழிப்பதற்கு அல்லவெனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் விமர்சனங்களை கடுமையாக, கண்டித்தும் உள்ளார்.

அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சுஜீவ ​சேனசிங்க, சமிந்த விஜேசிறி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டே குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி முன்வைத்ததாக அறியமுடிகின்றது.

இதேவேளை, மதுபானங்கள் விற்பனைத் தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி, தனக்குத் தெரியாமல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் இது அரசாங்கத்தை சிக்கலுக்கு உள்ளாக்கும் நடவடிக்கையென்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபான சிறிசேன, அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கான யோசனையையும் முன்வைத்தார்.

அந்த வர்த்தமானியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

இதேவேளை,  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கருத்து கொண்டு கருத்துரைத்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க,

“பெண்கள் மதுபான கொள்வனவு செய்தல் , விற்பனை மற்றும் மதுபான நிலையங்களை 10 மணிவரை திறந்திருப்பது தொடர்பாக நிதிஅமைச்சர் மங்கள சமவீரவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது”.

கடந்த வாரம் நிதி அமைச்சால் இதுதொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அகலவத்தை பகுதியில் இடம்பெற்ற மக்கள்  சந்திப்பின் போது உரையாற்றியிருந்த நிலையில், இன்று கூடிய அமைச்சரவை குறித்த வர்த்தமானியை நீக்குவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X