2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை எதிர் நியூசிலாந்து: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கின்றது

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, காலியில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்குள் இத்தொடரும் உள்ளடங்குகின்ற நிலையில், இரண்டு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராக இத்தொடர் அமைகின்றது.

இதேவேளை, இனிவரும் காலங்களில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்குள் உள்ளடங்குகின்ற நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசை முக்கியம் பெறுகையில் இரண்டு அணிகளும் தரவரிசையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் கொண்டுள்ளன.

தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள நியூசிலாந்து, இத்தொடரை 2-0 எனக் கைப்பற்றினால், இந்தியாவைப் பின்தள்ளி முதலாமிடத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது. மறுபக்கமான தொடரை 0-1 எனவோ அல்லது 0-2 எனவோ இழந்தால் தரவரிசையில் நான்காமிடத்துக்கு நியூசிலாந்து கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடரின் வேறெந்த முடிவும் நியூசிலாந்தின் தரவரிசை இடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

இதேவேளை, தரவரிசையில் ஆறாமிடத்தில் காணப்படும் இலங்கை, தொடரை 2-0 என வெல்லும் பட்சத்தில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடரின் வேறெந்த முடிவும் இலங்கையின் இடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

இந்நிலையில், இலங்கையில் வைத்து நியூசிலாந்தின் டெஸ்ட் பெறுபேறுகள் அவ்வளவாக சிறப்பாக இல்லாத நிலையிலும் ஓரளவுக்கு சிறப்பானதாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் அதற்குரிய காரணகர்த்தாக்களான அணித்தலைவர் கேன் வில்லியம்சன், றொஸ் டெய்லர், ட்ரெண்ட் போல்ட், டிம் செளதி ஆகியோர் இலங்கையில் வைத்து டெஸ்ட் போட்டிகளில் முன்னர் சிறப்பாகச் செயற்பட்டுள்ள நிலையில் இவர்களிடமிருந்து அதையொத்த பெறுபேறுகளை நியூசிலாந்து எதிர்பார்க்கின்றது.

இதுதவிர, ஒவ்வொரு வகையான சுழற்பந்துவீச்சாளரும் உள்ளடங்கலாக நான்கு சுழற்பந்துவீச்சாளர்களுடன் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களுக்கேற்றவாறு நியூசிலாந்து தமது குழாமைக் கொண்டிருக்கையில், இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர்கள் தமதணியின் வெற்றிக்கு ஆற்றிய பணியை இவர்களும் ஆற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

மறுபக்கத்தில், தென்னாபிரிக்காவில் வைத்து அவ்வணிக்கெதிராக தொடர் வெற்றியை இலங்கை பெற்றுக் கொண்டிருந்தாலும் அத்தொடர் வெற்றியானது குசல் பெரேரா, ஒஷாட பெர்ணான்டோ, விஷ்வர் பெர்ணான்டோ போன்ற தனிப்பட்ட நபர்களின் அதிக பங்களிப்புடனேயே அத்தொடர் வெற்றியானது பெறப்பட்டிருந்த நிலையில், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, அணிக்கு மீண்டும் திரும்பும் முன்னாள் அணித்தலைவர்கள் அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோருடன் குசல் மென்டிஸிலிருந்தும் தொடர்ச்சியான பெறுபேறுகளை இலங்கை எதிர்பார்த்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .