2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவுஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளராக லாங்கர்

Editorial   / 2018 மே 03 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக டரன் லீமனை, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஜஸ்டின் லாங்கர் பிரதியீடு செய்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து டரன் லீமன் விலகும்போது ஜஸ்டின் லாங்கரே அவரைப் பிரதியீடு செய்வார் என முன்னரே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்தைச் சேதமாக்கிய பிரச்சினைகளுக்குள்ளும் குறித்த எதிர்பார்ப்பு மாறாமல் ஜஸ்டின் லாங்கரே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி ஜேம்ஸ் சதர்லாண்ட், டரன் லீமனுக்கு அடுத்ததாக ஜஸ்டின் லாங்கர் என்பதை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பதாகவே அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தீர்மானித்து விட்டதாகக் கூறினார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு டிம் நீல்சன், மிக்கி ஆர்தரின் கீழ் உதவிப் பயிற்றுவிப்பாளராகவிருந்த ஜஸ்டின் லாங்கர், இதன் பின்னர் மேற்கு அவுஸ்திரேலிய மாநில அணியினதும் பிக் பாஷ் லீக்கில் பேர்த் ஸ்குறோச்சர்ஸ் அணியினதும் பயிற்றுவிப்பாளராக ஆறாண்டுகள் கடமையாற்றியிருந்தார்.

அவுஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த ஜஸ்டின் லாங்கர், 45.27 என்ற சராசரியில் 7,696 ஓட்டங்களைப் பெற்று 2006-07 ஆஷஸ் தொடருடன் ஓய்வுபெற்றிருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்தில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரே அவுஸ்திரேலிய அணிக்கு ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்கும் முதல் தொடராக அமையவுள்ளது.

ஒவ்வொரு வகையான போட்டிகளுக்கும் வெவ்வேறான பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பது குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டபோதும் தற்போது அனைத்து வகையான போட்டிகளுக்கும் ஜஸ்டின் லாங்கரே பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .