2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்தியாவை வெல்லுமா தென்னாபிரிக்கா?

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது தரம்சாலாவில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

தாம் இறுதியாகப் பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியாவை தென்னாபிரிக்கா வெள்ளையடித்ததுடன், இந்தியா இறுதியாகப் பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் நியூசிலாந்தால் வெள்ளையடிக்கப்பட்டபோதும் இந்தியாவில் வைத்து இந்தியாவை எதிர்கொள்வது தென்னாபிரிக்காவுக்கு நிச்சயமாக சவாலை வழங்கும்.

அந்தவகையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் ஹென்றிச் கிளாசென், கைல் வெரைன் ஆகியோர் பிரகாசித்திருந்த நிலையில், முன்னாள் அணித்தலைவர் பப் டு பிளெஸி, றஸி வான் டர் டுஸனின் மீள்வருகையானது தென்னாபிரிக்காவின் மத்தியவரிசையில் ஆக்கபூர்வமான போட்டியை உருவாக்குகிறது.

இந்நிலையில், குறித்த மத்தியவரிசையுடன் அணித்தலைவர் குயின்டன் டி கொக், தெம்பா பவுமாவும் பிரகாசிகும் பட்சத்தில் தென்னாபிரிக்கா வெற்றிக்கனியைப் பறிக்கலாம்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் காயம் மற்றும் முதல் குழந்தையை எதிர்பார்த்துள்ளமை காரணமாக ககிஸோ றபாடா, தப்ரையாஸ் ஷம்சியை தென்னாபிரிக்கா தவறவிடுகின்றமை அவ்வணிக்கு இழப்பாகக் காணப்படுகின்றபோதும், லுங்கி என்கிடி, அன்டிலி பெக்லுவாயோ, பெயுரன் ஹென்ட்றிக்ஸ், கேஷவ் மஹராஜ்ஜை உள்ளடக்கிய தென்னாபிரிக்க பந்துவீச்சுக் குழாமானது இந்தியத் துடுப்பாட்டவரிசைக்கு சவாலளிக்கும் வகையில் காணப்படுகிறது.

மறுபக்கமாக இந்தியாவைப் பொறுத்த வரையில் நியூசிலாந்தில் தொடரை இழந்த பின்னர் வெற்றிப் பக்கம் மீண்டும் திரும்பவேண்டியுள்ளது. அந்தவகையில், லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே உள்ளிட்டோருடன் அணித்தலைவர் விராட் கோலி, காயத்திலிருந்து குழாமுக்குத் திரும்பியுள்ள ஷிகர் தவான் ஆகியோர் மீண்டும் ஓட்டங்களைப் பெறுவது அவசியமாகிறது.

ரோஹித் ஷர்மா தொடர்ந்து காயமடைந்து காணப்படுவது இந்தியாவுக்கு இழப்பென்ற நிலையில் பிறித்திவி ஷா தனது ஆரம்பங்களை பாரிய ஓட்ட எண்ணிக்கைகளாக மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் அணியில் தனதிடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

இதேவேளை, ஹர்டிக் பாண்டியாவின் மீள்வருகையானது  இந்தியாவை சகலதுறைகளிலும் இந்தியாவைப் பலப்படுத்துகையில் நீண்டதொரு இடைவெளிக்கு பிறகு சகலதுறைகளிலும் செயற்பட அவரது உடல் எவ்வாறு அனுமதிக்கிறது என்பது கூர்ந்து அவதானிக்கப்படவேண்டிய நிலை காணப்படுகிறது.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் காயத்திலிருந்து மீண்ட ஜஸ்பிரிட் பும்ராவின் பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாத நிலையில் புவ்னேஷ்வர் குமாரின் மீள்வருகையை இன்முகத்துடன் இந்தியா வரவேற்கிறது. இவர்கள் இருவரும் இனிங்ஸின் ஆரம்பத்திலும், இறுதியிலும் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதிலும் நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இனிங்ஸின் மத்திய பகுதிகளில் எவ்வாறு விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார்கள் என்பதிலும் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு தங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .