2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறத் தவறியது இத்தாலி

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நான்கு தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்ற இத்தாலி, 1958ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக, ரஷ்யாவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறியுள்ளது.

சுவீடனுக்கெதிரான முதலாவது சுற்று தகுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்த இத்தாலி, இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்று தகுதிப் போட்டியில் எதுவிதக் கோல்களையும் பெறாமல் 0-0 என போட்டியை சமநிலையில் முடிக்க, 1-0 என்ற மொத்த கோல் அடிப்படையில் உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற, இத்தாலி உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறியது.

அந்தவகையில், 1930ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற மறுத்திருந்த இத்தாலி, தமது வரலாற்றில் இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறியுள்ளது. மறுபக்கம், 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக உலகக் கிண்ணத்துக்கு சுவீடன் தகுதிபெற்றுள்ளது.

இந்த இரண்டாவது சுற்று தகுதிப் போட்டியில், 76 சதவீதமான நேரம் இத்தாலியே பந்தை வைத்திருந்தபோதும் கோலெதனையும் பெற முடியாமல் போக, முதலாவது சுற்று தகுதிப் போட்டியில், சுவீடனின் மத்திய கள வீரர் ஜகொப் ஜொஹன்சனின் உதை, இத்தாலியின் மத்திய கள டானியல் டி றோசியில் பட்டு கோலானதே, உலகக் கிண்ணத்துக்கு சுவீடன் தகுதிபெறக் காரணமாய் அமைந்தது.

இப்போட்டியின் இறுதி நேரத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய ஸ்டெபன் எல் ஷராவி கோல் கம்பத்தை நோக்கி உதைத்த உதையே, இத்தாலி கோல் பெறுவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தபோதும் இந்த உதையை சுவீடனின் கோல் காப்பாளர் றொபின் ஒல்சன் தடுத்திருந்தார். இது தவிர இத்தாலியன் முன்கள வீரர் சிரோ இம்மொபைல் பல வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்ததுடன், போட்டியின் முதற்பாதியில் இவர் தாழ்வாக உதைத்த உதையொன்றை சுவீடனின் அணித்தலைவரான அன்ட்ரியாஸ் கிரான்குவிஸ்ட் தடுத்திருந்தார்.

இந்தப் போட்டியில் கோல் கம்பத்தை நோக்கி 20 உதைகளை இத்தாலி உதைத்திருந்தபோதும் சுவீடனின் கோல் கம்பப் பகுதிக்குள் அடிக்கடி நின்றிருந்த ஆறு பின்கள வீரர்களும் வந்த ஒவ்வொரு பந்துப் பரிமாற்றங்களையும் தடுத்திருந்தனர். மொத்தமாக 56 தடவைகள் உதைகளை வெளியேற்றியது மட்டுமன்றி, 19 தடவைகள் பந்துகளுடன் வந்தவர்களை இடைமறித்திருந்தனர்.

எவ்வாறெனினும், இத்தாலியின் மார்க்கோ பரோலோவை சுவீடனின் லுட்விக் அகஸ்டின்ஸன் வீழ்த்தியபோதும் இத்தாலியின் மட்டியோ டர்மியன், அன்ட்ரியா பர்ஸாலி ஆகியோர் கையால் பந்தை கையாண்டிருந்தபோதும் பெனால்டிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .