2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டிக்கு செல்லப்போவது இங்கிலாந்தா? குரோஷியாவா?

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, மொஸ்கோவின் லுஸ்கினி அரங்கில் இலங்கை நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில், இறுதிப் போட்டிக்குச் செல்வதற்காக இங்கிலாந்தும் குரோஷியாவும் பலப்பரீட்சை நடாத்துகின்றன.

இதில், இவ்வாண்டு உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இவ்விரண்டு அணிகளும் அரையிறுதிப் போட்டி வரை வரும் என்று கருதப்படாத நிலையில், தமது பெறுபேறுகளின் மூலமே இத்தனை தூரம் இரண்டு அணிகளும் வந்துள்ளன. குழுநிலைப் போட்டிகளில் ஆர்ஜென்டீனாவுக்கெதிராக குரோஷியாவும் பனாமாவுக்கெதிராக இங்கிலாந்தும் பெற்ற வெற்றிகளூடாக தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தன.

அந்தவகையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு குரோஷியாவும் 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தும் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன.

குழுநிலைப் போட்டிகளில் வெற்றியாளர்களாகவிருந்தாலும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியிலும் காலிறுதிப் போட்டியிலும் மேலதிக நேரம் வரை சென்று பெனால்டியிலேயே போராடி வெற்றிபெற்று அரையிறுதிக்கு குரோஷியா வந்துள்ள நிலையில், இங்கிலாந்தின் வீரர்களோடு ஒப்பிடுகையில் களைப்படைந்தவர்களாக குரோஷிய வீரர்கள் காணப்படுகின்றனர்.

மறுபக்கமாக, தமது இறுதி குழுநிலைப் போட்டியில் பெல்ஜியத்திடம் தோற்றதினூடு ஓரளவு இலகுவான பாதையூடாக அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து வந்தபோதும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் மேலதிக நேரம் வரை சென்று பெனால்டியிலேயே கொலம்பியாவை இங்கிலாந்து வென்றிருந்தது.

குரோஷியாவின் மிகப்பெரிய பலம், அவ்வணியின் வெற்றிவாய்ப்புகள் என்பன பிரதானமாக, அவ்வணியின் தலைவர் லூகா மோட்ரிட்ச், இவான் றகிட்டிச், இவான் பெரிசிக் ஆகியோரை உள்ளடக்கிய மத்தியகளத்திலேயே தங்கிக் காணப்படுகிறது. ஆக, குரோஷியாவின் மத்தியகளத்தின் நகர்வைக் கட்டுப்படுத்தினால் போட்டியை வெல்லக் கூடிய வாய்ப்புகள் இங்கிலாந்துக்கு அதிகமாக இருக்கும்.

குரோஷியாவின் இந்த நட்சத்திர வீரர்களை விட, முன்கள வீரர் மரியோ மண்டூஸிக், கோல் காப்பாளர் டானியல் சுபாசிச், பின்கள வீரர் டெஜான் லொவ்ரேன் ஆகியோரும் போட்டியின் போக்கை மாற்றக் கூடியவர்களாகக் காணப்படுகின்றனர்.

இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள், ஏறத்தாழ அவ்வணியின் தலைவரும் முன்கள வீரருமான ஹரி கேனிலேயே தங்கியுள்ளபோதும் கோல் காப்பாளர் ஜோர்டான் பிக்போர்ட், ஹரி மக்கியூரி, கெய்ரான் ட்ரிப்பியர் போன்ற நட்சத்திர அந்தஸ்தில்லாத வீரர்கள் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடந்த போட்டிகளில் பங்களித்துள்ளனர். ஆக, நட்சத்திர அந்தஸ்தில்லாத வீரரொருவரின் பங்களிப்புடன் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதிபெற்றால் ஆச்சரியமில்லை. இதுதவிர, இங்கிலாந்தின் ரஹீம் ஸ்டேர்லிங் கோல்களைப் பெறவில்லையென்றாலும் வேகமாக ஆட்டத்தை முன்னநகர்த்தி கோலைப் பெறக்கூடிய வீரராக அவரே காணப்படுகின்றார்.

ஆக, மொத்தத்தில் இரண்டு அணிகளும் ஏறத்தாழ சம அளவான வாய்ப்புகளையே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கு கொண்டிருக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .