2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: குரோஷியாவை வென்று சம்பியனாகியது பிரான்ஸ்

Editorial   / 2018 ஜூலை 15 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவந்த 21ஆவது கால்பந்தாந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் சம்பியனாக பிரான்ஸ் முடிசூடியுள்ளது. ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலுள்ள லுஸ்கினி அரங்கில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் குரோஷியாவை வென்றே 20ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்ஸ் சம்பியனானது.

இப்போட்டியின் 18ஆவது நிமிடத்தில், பிரான்ஸின் அன்டோனி கிறீஸ்மனை குரோஷியாவின் மார்சலோ பிரஸ்னோவிச் வீழ்த்த வழங்கப்பட்ட பிறீ கிக்கை அவர் உதைய, அது குரோஷியாவின் மரியோ மண்டூஸிக்கின் தலையில் பட்டு கோல் கம்பத்துக்குள் புகுந்த நிலையில் பிரான்ஸ் முன்னிலை பெற்றிருந்தது.

தொடர்ந்த ஆட்டத்தில், அடுத்த 10ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் பெற்ற கோலின் மூலம் கோலெண்ணிக்கையை குரோஷியா சமப்படுத்தியிருந்தது. எனினும் அடுத்த 10ஆவது நிமிடத்தில் இவான் பெரிசிக்கின் கையில் பந்து பட்டமையைத் தொடர்ந்து காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் உதவியுடன் வழங்கப்பட்ட பெனால்டியை அன்டோனி கிறீஸ்மன் கோலாக்க, பிரான்ஸ் மீண்டும் முன்னிலை பெற்றிருந்ததுடன், முதற்பாதி 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலையிலிருந்தவாறு முடிவுற்றது.

தொடர்ந்த இரண்டாவது பாதியில், போட்டியின் 59ஆவது நிமிடத்தில் பிரான்ஸின் போல் பொக்பாவின் முதலாவது உதை குரோஷியாவின் டொமாகோ விடாவால் தடுக்கப்பட்டு மீண்டும் அவரிடமே வர அவர் அதைக் கோலாக்க 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை பெற்றது. அடுத்த ஆறாவது நிமிடத்தில், தனது சக வீரர் லூகாஸ் பெர்ணான்டஸிடமிருந்து பெற்ற பந்தை கோல் கம்பத்திலிருந்து 25 அடி தூரத்திலிருந்து பிரான்ஸின் கிலியான் மப்பே கோலாக்க 4-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை பெற்றது.

அடுத்த நான்காவது நிமிடத்தில் பிரான்ஸின் கோல் காப்பாளர் ஹுயூகோ லோரிஸின் தவறைப் பயன்படுத்தி கோலைப் பெற்ற மரியோ மண்டூஸிக் பிரான்ஸின் முன்னிலையை  இரண்டு கோல்களாக குறைத்தபோதும் இதன்பின்னர் கோலெதுவும் பெறப்படாத நிலையில் இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற பிரான்ஸ், தனது இரண்டாவது உலகக் கிண்ணத்தை வென்றது.

இதேவேளை, குறித்த இறுதிப் போட்டியின் நாயகனாக அன்டோனி கிறீஸ்மன் தெரிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டு தொடரின் சிறந்த வீரருக்காக வழங்கப்படும் தங்கப் பந்து விருதை குரோஷிய அணியின் தலைவர் லூகா மோட்ரிட்ச் பெற்றிருந்தார். வெள்ளிப் பந்தை பெல்ஜியத்தின் தலைவர் ஈடின் ஹஸார்ட்டும் வெண்கலப் பந்தை அன்டோனி கிறீஸ்மனும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், தொடரின் சிறந்த கோல் காப்பாளருக்கான தங்கக் கையுறை விருதை பெல்ஜிய கோல் காப்பாளர் திபோ கோர்துவா பெற்றதோடு, தொடரின் சிறந்த இளம் வீரராக கிலியான் மப்பே தெரிவாகியிருந்தார்.

இதேவேளை, இத்தொடரில் அதிக கோல்களைப் பெறுபவர்களுக்கான தங்கக் காலணி விருதை ஆறு கோல்களைப் பெற்று இங்கிலாந்தின் அணித்தலைவர் ஹரி கேன் பெற்றிருந்தார். அன்டோனி கிறீஸ்மன், பெல்ஜியத்தின் றொமெலு லுக்காக்கு, கிலியான் மப்பே, போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரஷ்யாவின் டெனிஸ் செரஷேவ் ஆகியோர் தலா நான்கு கோல்களைப் பெற்றிருந்த நிலையில், அன்டோனி கிறீஸ்மன் இரண்டு கோல்களைப் பெற உதவியிருந்ததுடன், றொமெலு லுக்காக்கு ஒரு கோல் பெறப்படுவதற்கு உதவியிருந்த நிலையில் வெள்ளி, வெண்கலப் பாதணிகளை முறையே பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், தாம் விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு மஞ்சள் அட்டைகளை மாத்திரமே பெற்ற ஸ்பெய்ன், சிறந்த நன்னடத்தையை வெளிப்படுத்திய அணியாக தெரிவாகியிருந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இங்கிலாந்துடனான மூன்றாமிடத்துக்கான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று பெல்ஜியம் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தது. பெல்ஜியம் சார்பாக தோமஸ் மெனுயர், ஈடின் ஹஸார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .