2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: காலிறுதிகளில் பிளிஸ்கோவா, நடால், பெடரர்

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் 8ஆம் நாள் போட்டிகளில், உலகின் முதல்நிலை வீரர்களான கரோலினா பிளிஸ்கோவா, ரபேல் நடால் ஆகியோரோடு, 3ஆம் நிலை வீரரான ரொஜர் பெடரரும் வெற்றிபெற்றனர். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், உக்ரைனின் அலெக்ஸான்டர் டொல்கொபொலோவை எதிர்கொண்டார். 

மிகச்சிறப்பாக விளையாடிய நடால், 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்று, காலிறுதிக்குத் தகுதிபெற்றார். 

3ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 33ஆம் நிலை வீரரான ஃபிலிப் கொல்ஷ்ரெய்பெரை எதிர்கொண்டார். அவரும் சிறப்பாக விளையாடி, 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்குத் தகுதிபெற்றார். 

இருவரும் காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெறுவார்களாயின், அரையிறுதிப் போட்டியில் வைத்துச் சந்திக்கவுள்ளனர். 

9ஆம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டெவிட் கொபின், ரஷ்யாவின் அன்ட்ரே றுப்லெவை எதிர்கொண்டார். எனினும், 5-7, 6-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, கொபின் வெளியேறினார். 

பெண்கள் ஒற்றையர் போட்டிகளில், முதல்நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ஐக்கிய அமெரிக்காவின் ஜெனிபர் பிரடியை எதிர்கொண்டு, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் இலகுவாக வெற்றிகொண்டு, காலிறுதிக்குத் தகுதிபெற்றார். 

4ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விற்றோலினா, 15ஆம் நிலை வீராங்கனையான ஐ.அமெரிக்காவின் மடிசன் கீய்ஸை எதிர்கொண்டார். எனினும் கீய்ஸ், 7-6, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்குத் தகுதிபெற்றார். 

20ஆம் நிலை வீராங்கனையான ஐ.அமெரிக்காவின் கொகோ வன்டவெகே, செக் குடியரசின் லூசி சஃபரோவாவை எதிர்கொண்டு, 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, முன்னேறினார். 

இதன்மூலம், பெண்கள் ஒற்றையர் காலிறுதிப் போட்டிகளில் 4 அமெரிக்கர்கள் இடம்பெற்றுள்ளனர். வீனஸ் வில்லியம்ஸ், ஸ்லோவான் ஸ்டீபன்ஸ் ஆகியோர், ஏனைய அமெரிக்கர்களாவர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .