2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கட்டாரிடமிருந்து பறிக்குமாறு ஆறு நாடுகள் கோரிக்கை

Editorial   / 2017 ஜூலை 17 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாருடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்ட நாடுகளில் 6 நாடுகள், 2022ஆம் ஆண்டு கட்டாரில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை, அந்நாட்டிலிருந்து பறிக்க வேண்டுமெனவும், இல்லாதுவிடின் அந்த உலகக் கிண்ணத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளன.

சவூதி அரேபியா, யேமன், மௌரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகியன, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்துக்கு (ஃபீபா), இது குறித்து எழுதியுள்ளன. இந்தத் தகவலை, ஃபீபாவின் தலைவர் ஜியானி இன்பான்டினோ உறுதிப்படுத்தினார்.

கட்டாரை, பயங்கரவாதத்தின் தளம் எனவும் கோட்டை எனவும் வர்ணித்த இந்த நாடுகள், இரசிகர்களினதும் வீரர்களினதும் பாதுகாப்பு, ஆபத்தில் காணப்படுவதாகத் தெரிவித்தன.

சவூதி அரேபியா, 1994ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை 4 உலகக் கிண்ணங்களுக்குத் தகுதிபெற்றதோடு, 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்துக்குத் தகுதிபெறும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அணிக்கு, குறைந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன.

எகிப்து அணி, 1990ஆம் ஆண்டின் பின்னர் உலகக் கிண்ணத்துக்குத் தகுதிபெறாத போதிலும், 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்குத் தகுதிபெறும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. ஏனைய 3 நாடுகளும், உலகக் கிண்ணத்துக்கு இதுவரை தகுதிபெறாத நாடுகளாகக் காணப்படுகின்றன.

ஜூன் மாதத்தில் எழுந்த இந்த இராஜதந்திர நெருக்கடியைத் தொடர்ந்து, கட்டாருடன் தொடர்ச்சியான தொடர்பாடல்களைப் பேணிவருவதாக, ஃபீபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .