2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொமியுனிட்டி ஷீல்டைக் கைப்பற்றியது சிற்றி

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க கொமியுனிட்டி ஷீல்டை, இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி கைப்பற்றியது.

நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களுக்கும் இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் சம்பியன்களுக்குமிடையிலான குறித்த போட்டியில், நடப்பு கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் சம்பியன்களான செல்சியை வென்றே கொமியுனிட்டி ஷீல்டை மன்செஸ்டர் சிற்றி கைப்பற்றியது.

வெம்ப்ளியில் நேற்று  இடம்பெற்ற குறித்த போட்டியின் 13ஆவது நிமிடத்தில், இங்கிலாந்தின் 17 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடிய பில் பொடன் முன்னேறி வந்து கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை சேர்ஜியோ அகுரோ கோலாக்க ஆரம்பத்தில் மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது. குறித்த கோல், மன்செஸ்டர் சிற்றிக்காக சேர்ஜியோ அகுரோ பெற்ற 200ஆவது கோலாகும். பின்னர் முதற்பாதி முடிவடையும் வரையும் மேலதிக கோலெதுவும் பெறப்படாத நிலையில் முதற்பாதியில், மன்செஸ்டர் சிற்றி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றவாறு முடிவடைந்தது.

பின்னர் இரண்டாவது பாதியின் 58ஆவது நிமிடத்தில், பெர்ணார்டோ சில்வா கொடுத்த பந்தை சேர்ஜியோ அகுரோ கோலாக்க 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற மன்செஸ்டர் சிற்றி, இதன்பின்னர் கோலெதுவும் பெறப்படாத நிலையில் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று தமது ஐந்தாவது கொமியுனிட்டி ஷீல்டைக் கைப்பற்றிக் கொண்டது.

இப்போட்டியில், கலும் ஹட்சன்-ஓடோய் உதைந்த ஒரேயொரு உதையையே கோல் கம்பத்தை நோக்கி செல்சி செலுத்தியிருந்தது. குறித்த உதையில் மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் கிளாடியோ பிராவோ தடுமாறியபோதும் அதை வெற்றிகரமாகத் தடுத்திருந்தார்.

உலகக் கிண்ணத்தில் பங்கேற்றமை காரணமாக, செல்சியின் ஈடின் ஹஸார்ட், திபோ கோர்துவா ஆகியோரும் மன்செஸ்டர் சிற்றியின் ரஹீம் ஸ்டேர்லிங், டேவிட் சில்வா, கெவின் டி ப்ரூனே ஆகியோரும் குறித்த போட்டியில் விளையாடியிருக்கவில்லை.

இப்போட்டியின்போது கடுமையான வெப்பமான வானிலை காணப்பட்ட நிலையில், வீரர்கள் நீர் இடைவேளைகளை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .