2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சந்திமால் வருவார்; ஹேரத் சந்தேகமே

Editorial   / 2017 ஜூலை 31 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், இலங்கை அணியின் தலைவர் டினேஷ் சந்திமால், அநேகமாகப் பங்குகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 1ஆவது டெஸ்ட் போட்டியில் தலைவராகப் பங்குபற்றிய ஹேரத், பங்குபற்றுவது குறித்துச் சந்தேகமே நிலவுகிறது.

இலங்கை அணியின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சந்திமால், நியூமோனியா காரணமாக, காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் கலந்துகொண்டிருக்கவில்லை. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், வைத்தியசாலையிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க, "டினேஷ், கட்டாயமாகத் தகுதிபெறுவார். ஞாயிற்றுக்கிழமை காலை, அவர் விளையாடினார். கடந்த சில தினங்களாக, அவர் துடுப்பெடுத்தாடினார்" என்று குறிப்பிட்டார்.

இலங்கை அணியின் பிரதான பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத், முதலாவது டெஸ்ட் போட்டியில் காயத்துக்கு உள்ளாகியிருந்தார். களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது, விரலில் பந்து தாக்கியதன் காரணமாக, அவர் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார். அதன் பின்னர் அவர், 4ஆவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடியும் இருக்கவில்லை.

அடுத்த சில நாட்கள் வரை, ஹேரத்துக்கு வழங்கப்படுமெனத் தெரிவித்த குருசிங்க, அவர் முழுமையான உடற்றகுதி அடைகிறார் என்பதை உறுதிசெய்வதற்கு, கடைசி நிமிடம் வரை வாய்ப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

ஹேரத்தின் இடது கையின் விரல்களே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பந்துவீசுவதற்குக் காணப்படும் இடர்பாடே, முக்கியமானதாக அமைந்துள்ளது. விரலில் வீக்கம் ஏற்படவில்லை என்றாலும், கடுமையான வலி காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

ஹேரத் விளையாட முடியாது என்றால், இடதுகைச் சுழற்பந்து வீச்சாளரான மலிந்த புஷ்பகுமார, தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் சகலதுறை வீரரான அசேல குணரட்னவும், முதலாவது போட்டியில் காயமடைந்த நிலையில், அவர், இந்தியாவுக்கு எதிரான தொடர் முழுவதற்கும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, யாரைத் தெரிவுசெய்வது என்ற கேள்வியும், இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. அநேகமாக, சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஈர் அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட், எஸ்.எஸ்.சி மைதானத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (3) ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .