2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனானது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2018 மே 09 , பி.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கூப் டி பிரான்ஸ் தொடரில் பரிஸ் ஸா ஜெர்மைன் அணி சம்பியனானது.

இலங்கை நேரப்படி, இன்று அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் லெஸ் ஹேர்பியர்ஸ் அணியை வென்றே பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் ஆரம்பத்திலேயே பரிஸ் ஸா ஜெர்மைனின் ஜியோவனி லொ செல்ஸோ, கிலியான் மப்பேயின் உதைகள் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தன. இதன்பின்னர் மீண்டும் ஜியோவனி லொ செல்ஸோவின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்ததுடன், பின்னர் போட்டியின் 26ஆவது நிமிடத்தில் கோல் கம்பத்திலிருந்து 25 அடி தூரத்திலிருந்து கோலொன்றைப் பெற்ற ஜியோவனி லொ செல்ஸோ பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு முன்னிலையை வழங்கினார்.

பின்னர், பரிஸ் ஸா ஜெர்மைனின் டனி அல்விஸ், கோல் கம்பத்திலிருது 30 அடி தூரத்திலிருந்து உதைந்த பிறீ கிக்கொன்று கோல் கம்பத்துக்கு வெளியே சென்றதுடன், கிலியான் மப்பே தலையால் முட்டிய பந்தும் கோல் கம்பத்துக்கு வெளியால் செல்ல 1-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றபடி நிறைவடைந்தது.

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில், பரிஸ் ஸா ஜெர்மைனின் எடின்சன் கவானியின் உதையை லெஸ் ஹேர்பியர்ஸ் அணியின் கோல் காப்பாளர் மத்தியூ பிச்சொட் அபாரமாகத் தடுத்திருந்தார். இதன்பின்னர் போட்டியின் 51ஆவது நிமிடத்தில் கிலியான் மப்பே கோலொன்றைப் பெற்றதாகக் கருதப்பட்டபோதும், காணொளி உதவி மத்தியஸ்தரின் கலந்தாலோசனையுடன் இக்கோல் பெறப்படுவதற்கு முன்பு பரிஸ் ஸா ஜெர்மைனின் மார்க்குய்ஹொஸ் கையால் பந்தைக் கையாண்டார் என குறித்த கோல் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்தும் கிலியன் மப்பே கோல் கம்பத்துக்கு அருகேயிருந்து உதைந்த உதையொன்றை கால்களால் மத்தியூ மச்சொட் புத்திசாலித்தனமாக தடுத்தபோதும், பரிஸ் ஸா ஜெர்மைனின் அஞ்சல் டி மரியா கொடுத்த பந்தைக் கொண்டு முன்னேறிய எடின்சன் கவானி வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை போட்டியின் 75ஆவது நிமிடத்தில் அவர் கோலாக்க 2-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்று கூப் டி பிரான்ஸ் தொடரில் தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் மொத்தமாக 12ஆவது தடவையாகவும் சம்பியனாகிக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .