2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

செல்சியைத் தோற்கடித்து மீண்டும் முதலிடத்தில் மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முன்னேறியது.

தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற செல்சியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு மன்செஸ்டர் சிற்றி முன்னேறியது.

இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே, சக மத்தியகள வீரர் கெவின் டீ ப்ரூனேயின் வேகமான பிறீ கிக்கை மன்செஸ்டர் சிற்றியின் முன்கள வீரர் ரஹீம் ஸ்டேர்லிங் கோலாக்கி ஆரம்பத்திலேயே முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்த போட்டியில், கோல் பெறும் வாய்ப்பொன்றைத் தவறவிட்ட மன்செஸ்டர் சிற்றியின் இன்னொரு முன்கள வீரரான சேர்ஜியோ அகுரோ, 13ஆவது நிமிடத்தில் அபாரமானதொரு கோலைப் பெற்று மன்செஸ்டர் சிற்றியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

அடுத்த ஆறாவது நிமிடத்தில், செல்சியின் மத்தியகள வீரர் றொஸ் பார்க்லி தலையால் முட்டிய பந்து நேரடியாக அகுரோவின் கால்களில் வர, அவர் அதைக் கோலாக்கி 3-0 என்ற முன்னிலையை மன்செஸ்டர் சிற்றிக்கு வழங்கினார்.

இதற்கடுத்த ஆறாவது நிமிடத்தில், மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகள வீரர் இல்கி குன்டோகன் கோலொன்றைப் பெற முதல் 25 நிமிடங்களிலேயே 0-4 என்ற கோல் கணக்கில் செல்சி பின்தங்கியது.

இரண்டாவது பாதி ஆரம்பித்த ஒன்பதாவது நிமிடத்தில், ஸ்டேர்லிங்கை விதிமுறைகளை மீறி செல்சியின் பின்கள வீரர் சீஸர் அத்பிலிகெட்ட்டா கையாள வழங்கப்பட்ட பெனால்டியை கோலாக்கிய அகுரோ தனது மூன்றாவது கோலைப் பெற்றதுடன் 5-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றிக்கு முன்னிலையை வழங்கினார்.

அந்தவகையில், 15ஆவது தடவையாக மன்செஸ்டர் சிற்றிக்காக மூன்று கோல்களைப் பெற்ற அகுரோ, பிறீமியர் லீக்கில் 11ஆவது தடவையாக மூன்று கோல்களைப் பூர்தி செய்து, பிறீமியர் லீக்கில் அதிக தடவைகள் மூன்று கோல்களைப் பெற்றவரான அலன் ஷெரருடன் முதலிடத்தை பகர்ந்து கொண்டுள்ளார்.

பின்னர், போட்டி முடிவடைய 10 நிமிடங்களில் இருக்கையில், ஸ்டேர்லிங் தனது இரண்டாவது கோலைப் பெற்றதோடு இறுதியில் 6-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.

அந்தவகையில், லிவர்பூலை விட ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளபோதும் அவ்வணியுடன் புள்ளிகளை சமமாகக் கொண்டு 10 கோல்கள் அதிகமான கோல் வித்தியாசத்தைக் கொண்டுள்ள நிலையில் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு மன்செஸ்டர் சிற்றி முன்னேறியது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற லெய்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, டேவின்சன் சந்தேஸ், கிறிஸ்டியன் எரிக்சன், சண் ஹெயுங் மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, லெய்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேமி வார்டி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .