2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜப்பானிய கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் ஹமில்டன்

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய கிரான்ட் பிறிக்ஸில் நேற்று வென்ற மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், தனது ஐந்தாவது உலக பட்டத்தை நெருங்கின்றார்.

குறித்த பந்தயத்தை முதலாவதாக ஆரம்பித்திருந்த ஹமில்டன், பந்தயம் முழுவதும் முன்னிலை வகித்து முதலாமிடத்தைப் பெற்ற நிலையில், அவரின் சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் இரண்டாமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்து இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார்.

அந்தவகையில், கடந்த கிரான்ட் பிறிக்ஸ், இந்த கிரான்ட் பிறிக்ஸ் போல அடுத்த ஐக்கிய அமெரிக்க கிரான்ட் பிறிக்ஸிலும் முதலாமிடத்தை ஹமில்டனும் இரண்டாமிடத்தை போத்தாஸும் வென்றால், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி தனது ஐந்தாவது உலகப் பட்டத்தை ஹமில்டன் பெற்றுக் கொள்வார்.

குறித்த பந்தயத்தில், முதலாம், இரண்டாம் இடங்களிலிருந்து ஆரம்பித்த ஹமில்டனும் போத்தாஸும் முதலாம் இரண்டாம் இடங்களையே பெற்றிருந்த நிலையில் அதன்பின்னாலேயே போட்டி நிலவியிருந்தது.

இதில், ஹமில்டனின் போட்டியாளரான பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல், எட்டாமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்து, தனது வேகமான கார் காரணமாக முன்னேறி நான்காமிடத்தை அடைந்து மூன்றாமிடத்துக்கு முன்னேற முயலுகையில், மூன்றாமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்து மூன்றாமிடத்திலிருந்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனுடன் மோதி பின்னிலைக்குச் சென்று பின்னர் மீண்டு இறுதியாக ஆறாமிடத்தைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, வெர்ஸ்டப்பன் முதலாவது சுற்றில் ஓடுபாதைக்கு வெளியே போய் பின்னர் மீள ஓடுபாதைக்கு வரும்போது வெட்டலின் சக பெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனனைத் தள்ளிய சந்தர்ப்பத்திலேயே றைக்கோனனை வெட்டல் முந்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த சம்பவத்தின் காரணமாக வெர்ஸ்டப்பனுக்கு டயர் மாற்றும்போது ஐந்து செக்கன்கள் தண்டம் வழங்கப்பட்டிருந்தபோதும் இறுதியில் அவரே மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, வெர்ஸ்டப்பனின் சக றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டானியல் றிச்சியார்டோ, தகுதிநிலைகாண் பந்தயத்தில் இயந்திரப் பிரச்சினை காரணமாக 15ஆம் இடத்திலிருந்தே பந்தயத்தை ஆரம்பித்தபோதும் பெராரி அணியின் கார்களை முந்தி நான்காமிடத்தைப் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .