2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’தலையை நிமிர்த்தியே செல்கிறோம்’

Editorial   / 2017 ஜூன் 20 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில், பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தபோதும், “ஒரு பிரிவாக, நாங்கள் மிகவும் பெருமைப்படலாம். எங்களது தலையை உயர்த்தியபடியே, நாங்கள் இங்கிருந்து நாங்கள் செல்கிறோம். ஏனெனில், ஓர் அணியாக, நாங்கள் எதிர்நோக்கும் எதிர்பார்ப்புகள், அழுத்தங்களை நாங்கள் புரிந்துள்ளோம்” என, இந்திய அணியின் தலைவர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த கோலி, இறுதிப் போட்டியில், துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்துத் துறைகளிலும் தாம் தோற்கடிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் சிறப்பாகப் பந்துவீசியதாகவும், களத்தில் அழுத்தத்தைப் பிரயோகித்ததாகவும், தங்களது சிறந்த விளையாட்டை தாங்கள் விளையாடவில்லை என்பதில், எந்தவொரு தயக்கமோ அல்லது வெட்கமோ இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஓட்ட எண்ணிக்கையொன்றைத் துரத்தும்போது, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழப்பது, எப்போதும் நல்லதல்ல எனத் தெரிவித்த கோலி, தாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததாகவும், ஒரு பெரிய இணைப்பாட்டம் இருந்திருந்தால் வெற்றிபெற்றிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியில், இந்தியாவினுடைய விக்கெட்டுகள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டாலும், ஹார்டிக் பாண்டியா, அதிரடியாக விளையாடியிருந்தார். பின்னர், “ரண் அவுட்” முறையில் ஆட்டமிழந்த ஹார்டிக் பாண்டியா, அப்போது களத்திலிருந்த ஜடேஜாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்ததுடன், வீரர்கள் அறைக்குச் செல்லும்போது ஆவேசமாகச் சென்றிருந்தார். இந்நிலையில், உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதற்காக, பாண்டியா மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்றவாறான கருத்துகளை, கோலி வெளிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை, பாகிஸ்தானின் இனிங்ஸின் போது, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி, ஃபக்கார் ஸமான் சதம் பெற்றிருந்தார். இந்நிலையில், கருத்துத் தெரிவித்த கோலி, ஸமான் போன்றவர்கள் துடுப்பெடுத்தாடும்போது, வழமைக்கு மாறான அடிகளை அடிக்கும்போதும், அவற்றை நிறுத்துவது கடினமெனவும், ஸமானின் 80 சதவீதமான அடிகள், உயர்ந்த ஆபத்தைக் கொண்டவை என்றபோதும், அவற்றில் ஓட்டங்கள் பெறப்பட்டதாகக் கூறினார்.

பாகிஸ்தான் அணியின் இனிங்ஸின்போது, 25 மேலதிக ஓட்டங்களை இந்தியா வழங்கியிருந்த நிலையில், எதிர்காலத்தில், மேலதிக ஓட்டங்கள் தொடர்பாக நாங்கள் கவனமெடுக்க வேண்டும் என்று கோலி கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .