2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நாளை ஆரம்பிக்கின்றது டெஸ்ட் தொடர்

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், காலியில் நாளைகாலை 10 மணிக்கு தொடங்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இத்தொடருக்கு முன்பதாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளுக்கான தரவரிசையில் ஆறாமிடத்தில் இலங்கையும் இரண்டாமிடத்தில் தென்னாபிரிக்காவும் காணப்படுகின்ற நிலையில் இத்தொடரின் முடிவு இரண்டு அணிகளின் தரவரிசையிலும் மாற்றத்தை ஏற்படுத்தாது.

மாறாக, சந்திக ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் இளம் வீரர்களோடு முன்னேறத்தைக் கண்டு வரும் இலங்கையணிக்கு, தென்னாபிரிக்கா போன்ற பெரிய அணியுடன் விளையாடி தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமொன்று காணப்படுகின்றது.

இலங்கை இறுதியாக விளையாடிய டெஸ்ட் போட்டியான, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் இலங்கையணியில் இடம்பெற்று வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பிரகாசித்த லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோர் சுழற்பந்துவீச்சுக்கே பெரும்பாலாக ஒத்துழைக்கும் இலங்கை மைதானங்களில் எவ்வாறு செயற்படுவர் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

காலி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் காணப்பட்டால், இவர்கள் இருவரில் ஒருவருக்குப் பதிலாக மேலதிக சுழற்பந்துவீச்சாளரொருவர் விளையாடும் நிலை காணப்படுகிறது. துடுப்பாட்டப் பக்கம், திமுத் கருணாரத்னவும் அஞ்சலோ மத்தியூஸும் அணிக்குத் திரும்புவது பலமானதாக நோக்கப்படுகிறது.

இந்நிலையில், இத்தொடரைத் தொடர்ந்து இவ்வாண்டு நவம்பரில் இடம்பெறவுள்ள இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டித் தொடருடன் சர்வதேசப் போட்டிகளில் ஓய்வுபெறவுள்ளதாக கருத்துக்களை இலங்கையின் சிரேஷ்ட வீரர் ரங்கன ஹேரத் வெளிப்படுத்தியுள்ள நிலையில் அவரின் பெறுபேறுகள் இத்தொடரில் உற்று நோக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

இதேவேளை, ஏ.பி டி வில்லியர்ஸ் ஓய்வுபெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்க அணியின் இளம் துடுப்பாட்ட வீரர்களான தெம்பா பவுமா, ஏய்டன் மர்க்ரம், தெனியுஸ் டி ப்ரூன் ஆகியோர் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தம்மை நிரூபிக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

பந்துவீச்சுப் பக்கம் தென்னாபிரிக்காவின் பலமாக வேகப்பந்துவீச்சே வழங்குவதால் டேல் ஸ்டெய்ன், கஜிஸோ றபாடா, வேர்ணன் பிலாந்தர் என்று மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் கேஷவ் மஹராஜ்ஜுமே களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாடசாலை மாணவர்களும் கிரிக்கெட் அகடமி மாணவர்களும் இத்தொடரை இலவசமாக பார்வையிடலாமென இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பாடசாலை சீருடையுடன் மைதானங்களுக்கு பாடசாலை மாணவர்கள் வரலாமெனவும் கிரிக்கெட் அகடமி மாணவர்கள், அவர்களுடைய கிரிக்கெட் அகடமி அடையாள அட்டைகளை காண்பித்து மைதானங்களுக்குள் நுழையலாம் எனக் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X