2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பயேர்ணை வீழ்த்தி காலிறுதியில் லிவர்பூல்

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தகுதிபெற்றுள்ளது.

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுடனான, தமது மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கிடையேயான சுற்றுப் போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டிருந்த லிவர்பூல், அவ்வணியின் மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் அவ்வணியை வீழ்த்தியதைத் தொடர்ந்தே காலிறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதிபெற்றது.

இப்போட்டியின் 24ஆவது நிமிடத்தில், சக முன்கள வீரர் மொஹமட் சாலாவிடமிருந்து பெற்ற பந்தை, கோல் கம்பத்தை நோக்கி லிவர்பூலின் இன்னொரு முன்கள வீரரான றொபேர்ட்டோ பெர்மினோ செலுத்தியிருந்தபோதும், மயிரிழையில் அது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது.

எனினும், அடுத்த இரண்டாவது நிமிடத்தில், சக பின்கள் வீரர் வேர்ஜில் வான் டிஜிக், நீண்ட தூரத்திலிருந்து வழங்கிய பந்தை உடனடியாகக் கட்டுப்படுத்தி, தன்னை துரத்திய பயேர்ண் மியூனிச்சின் பின்கள வீரர் றபின்ஹா, கோல் காப்பாளர் மனுவல் நோயர் ஆகியோரை ஏமாற்றி லிவர்பூலின் இன்னொரு முன்கள வீரரான சாடியோ மனே பெற்ற கோலின் மூலம் அவ்வணி முன்னிலை பெற்றது.

இந்நிலையில், சக பின்கள வீரர் நிக்லஸ் சுலேயிடமிருந்து பெற்ற பந்தை, பயேர்ண் மியூனிச்சின் முன்கள வீரரான சேர்ஜி நர்பி பெற்று, தனது சக முன்கள வீரரான றொபேர்ட் லெவன்டோஸ்கியிடம் கொடுக்க எதிர்பார்த்தபோது, அதை போட்டியின் 39ஆவது நிமிடத்தில் லிவர்பூலின் பின்கள வீரர் ஜோயல் மட்டிப் ஓவ்ண் கோலாக்க்கியதுடன் முதற்பாதி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில், சக மத்தியகள வீரர் ஜேம்ஸ் மில்னரிடமிருந்து வந்த மூலையுதையை, றபின்ஹா, பயேர்ணின் இன்னொரு பின்கள வீரரான மற் ஹம்மெல்ஸுக்கு மேலால் மேலெழுந்து, போட்டியின் 69ஆவது நிமிடத்தில் வேர்ஜில் வான் டிஜிக் தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலம் லிவர்பூல் மீண்டும் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, போட்டி முடிவடைய ஆறு நிமிடங்களிருக்கையில், மாற்று வீரராகக் களமிறங்கிய லிவர்பூலின் முன்கள வீரரான டிவோக் ஒரிஜி, சக முன்கள வீரர் மொஹமட் சாலாவிடம் கொடுத்த பந்தை, அவர் மேலால் செலுத்த, அதைத் தலையால் முட்டி சாடியோ மனே கோலாக்கியதோடு, 3-1 என்ற மொத்த கோல் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதிபெற்றது.

இந்நிலையில், பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று, இறுதி 16 அணிகளுக்கிடையேயான சுற்றுப் போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் முடித்திருந்த ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும் பிலிப் கோச்சினியோ, ஜெராட் பிகே, உஸ்மான் டெம்பிலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றதோடு, லயோன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகாஸ் தெளசர்ட் பெற்றிருந்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .