2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெல்ஜியத்தை வென்று இறுதிப் போட்டியில் பிரான்ஸ்

Editorial   / 2018 ஜூலை 11 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் தகுதிபெற்றுள்ளது. சென். பீற்றர்ஸ்பேர்க்கில் நேற்றிரவு இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வென்றே உலகக் கிண்ணத்தில் தமது மூன்றாவது இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் தகுதிபெற்றது.

1998ஆம் ஆண்டு உலக சம்பியன்களான பிரான்ஸ், குறித்த போட்டியின் 51ஆவது நிமிடத்தில், அன்டோனி கிறீஸ்மனின் மூலையுதையை சாமுவேல் உம்டிட்டி தலையால் முட்டி பெற்ற கோலுடனேயே 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இப்போட்டியின் 64 சதவீதமான நேரத்தில் பெல்ஜியமே பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் கிலியான் மப்பேயை மையப்படுத்தியதான அதிரடியான வேகமான நகர்வுகள் மூலமாகவே தாம் மேம்பட்ட அணியென்பதை வெளிப்படுத்தியிருந்தது.

பெரும்பாலான நேரங்களில் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் கோல் பெறுவதற்கான ஒன்பது உதைகளையே பெல்ஜியம் செலுத்தியிருந்த நிலையில், 19 உதைகளை பிரான்ஸ் செலுத்தியிருந்தது. குறித்த தரவானது பிரான்ஸின் அதிரடியான வேகமான நகர்வுகளை எடுத்துக் காட்டுவது மட்டுமல்லாது, தான் பெற்ற கோல் மாத்திரமல்லாமல் மத்திய பின்கள வீரராக ரபேல் வரானேயுடன் இணைந்து சாமுவேல் உம்டிட்டி மேற்கொண்ட சிறந்த தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. இதுதவிர, பிரான்ஸின் கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸ் அபாரமாக செயற்பட்டு பல தடுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

மறுபக்கமாக, இவ்வாண்டு உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு தடவைகள் மஞ்சள் அட்டை காட்டப்பெற்றமை காரணமாக இப்போட்டியை தோமஸ் மெனுயர் தவறவிட்டமை பெல்ஜியத்தை முழுமையாகப் பாதித்திருந்தது. அவரின் இடத்தில் நாஸர் சட்லி விளையாடியிருக்க, மத்தியகளத்தில் மரானே பெலைனி, மூஸா டெம்பிலி, அலெக்ஸ் விட்சல் ஆகியோர் விளையாடியிருந்தனர். இவர்கள் குறிப்பிடத்தக்கதாக தடுப்பாட்டத்தை மேற்கொள்ளக் கூடியவர்கள் இல்லை என்ற நிலையில், பிரான்ஸில் பிளெய்ஸி மத்தியூடி, என்கலோ கன்டே, போல் பொக்பா மத்தியகளத்தைக் கட்டுப்படுத்தியிருந்தனர்.

இதுதவிர, பெலைனி, விட்சல் ஆகியோர் வேகமான முன்னநகர்ந்து செல்ல முடியாதவர்களாக இருந்த நிலையில் முன்களத்துக்கு பந்துகள் செல்லவில்லை. பெல்ஜியத்தில், அணித்தலைவரும் முன்கள வீரருமான ஈடின் ஹஸார்ட் மாத்திரமே தன்னால் முடிந்தளவுக்கு வேகமாக முன்னநகர்ந்து பிரான்ஸின் பின்கள வீரர்களுக்கு நெருக்கடியளித்திருந்தார். இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் சம்பியன்களாக மன்செஸ்டர் சிற்றி முடிசூடுவதற்கு துணைபுரிந்திருந்த கெவின் டீ ப்ரூனே, மன்செஸ்டர் யுனைட்டட்டின் றொமேலு லுக்காக்கு ஆகியோர் பிரகாசிக்கத் தவறியிருந்தனர். ஹஸார்ட் தவிர, பெல்ஜியத்தின் கோல் காப்பாளர் திபோ கோர்துவாவே குறிப்பிடத்தக்கதாக பிரகாசித்திருந்தார். பிளெய்ஸி மத்தியூடி உள்ளிட்டோரின் உதைகளை அவர் தடுத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X