2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மயிரிழையில் தப்பியது ஆஸி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணியின் பின்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களின் அற்புதமான போராட்டத்தின் விளைவாக, வெற்றிக்கு மிக அருகில் சென்ற பாகிஸ்தான், இறுதியில் 39 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

2 விக்கெட்டுகள் கைவசமிருந்த நிலையில், 108 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், இன்றைய 5ஆவது நாளை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி சார்பாக, சதம் பெற்றிருந்த அசத் ஷபீக்கும் 4 ஓட்டங்களுடன் காணப்பட்ட யாசீர் ஷாவும், சிறப்பாக விளையாடினர். இருவரும், இன்று 57 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அப்போது, வெற்றி பெறுவதற்கு 41 ஓட்டங்கள் தேவை என்ற நிலை காணப்பட்டது. ஆனால், சதம் பெற்றிருந்த ஷபீக், வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க்கின் அற்புதமான பந்தொன்றால் ஆட்டமிழந்து வெளியேற, வரலாறு படைக்கும் பாகிஸ்தானின் கனவு தகர்ந்தது. அதே ஓவரிலேயே, 10ஆவது விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது.

பாகிஸ்தான் அணி பெற்றுக்கொண்ட 450 ஓட்டங்கள், 4ஆவது இனிங்ஸொன்றில் பெறப்பட்ட, 3ஆவது அதிகூடிய ஓட்டங்களாகும். இன்னுமிரு ஓட்டங்களைப் பெற்றிருந்தால், 2ஆவது அதிகூடிய ஓட்டங்கள் என்ற நிலை உருவாகியிருக்கும். இதில், பாகிஸ்தானின் இறுதி 4 விக்கெட்டுகளும், 230 ஓட்டங்களைப் பகிர்ந்தன. 4ஆவதாகத் துடுப்பெடுத்தாடிய அணியொன்று, இறுதி 4 விக்கெட்டுகளுக்கும் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இவையாகும்.

இந்தப் போட்டியில், தனது 10ஆவது டெஸ்ட் சதத்தை, ஷபீக் பெற்றுக் கொண்டார். அவற்றில் 9 சதங்கள், 6ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிப் பெற்றவையாகும். இதன்மூலம், 6ஆம் இலக்கத்தில் அதிக சதங்களைப் பெற்றவர் என்ற பெருமையை, ஷபீக் பெற்றுக் கொண்டார். இதற்கு முன்னர், கரி சோபர்ஸ், 6ஆவது இலக்கத்தில் 8 சதங்களைப் பெற்றமையையே, சாதனையாக இருந்தது.

மறுபக்கத்தில், பிறிஸ்பேண் மைதானத்தில், 1988ஆம் ஆண்டே இறுதியாகத் தோல்வியைச் சந்தித்த அவுஸ்திரேலிய அணி, அதற்குப் பின்னர் விளையாடிய 28 டெஸ்ட் போட்டிகளில் 22 போட்டிகளில் வென்றுள்ளதோடு, வெற்றி - தோல்வியற்ற 6 முடிவுகளைப் பெற்றுள்ளது.

தவிர, இந்தப் போட்டி, பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக இடம்பெற்ற நிலையில், இரு அணிகளுமே, பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தோல்வியடையாத அணிகளாக, இப்போட்டியில் களமிறங்கின. இதில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றமையின் மூலம், மென்சிவப்புப் பந்துகளைப் பயன்படுத்தி விளையாடப்படும் இப்போட்டிகளில், 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவுஸ்திரேலிய அணி, அவை மூன்றிலும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விவரம்...

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 429/10 (துடுப்பாட்டம்: ஸ்டீவன் ஸ்மித் 130, பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப் 105, மற் றென்ஷோ 71 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 4/97, வஹாப் றியாஸ் 4/89, யாசீர் ஷா 2/129)

பாகிஸ்தான்: 142/10 (துடுப்பாட்டம்: சப்ராஸ் அஹமட் ஆ.இ 59 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேஸல்வூட் 3/22, ஜக்ஸன் பேர்ட் 3/23, மிற்சல் ஸ்டார்க் 3/63.)

அவுஸ்திரேலியா: 202/5 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 74, ஸ்டீவன் ஸ்மித் 63, பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப் ஆ.இ 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: றஹாத் அலி 2/40)

பாகிஸ்தான்: 450/10 (துடுப்பாட்டம்: அசத் ஷபீக் 137, அஸார் அலி 71, யுனிஸ் கான் 65, மொஹமட் ஆமிர் 48, யாசீர் ஷா 33, வஹான் றியாஸ் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்சல் ஸ்டார்க் 4/119, ஜக்ஸன் பேர்ட் 3/110, நேதன் லையன் 2/108.)

போட்டியின் நாயகன்: அசத் ஷபீக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .