2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

முதலாவது டெஸ்டை வெற்றி தோல்வியின்றி முடித்தது அவுஸ்திரேலியா

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டுபாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில், இன்றைய இறுதி ஐந்தாம் நாளில் உஸ்மான் கவாஜா, அணித்தலைவர் டிம் பெய்னின் போராட்டத்தால் வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 482 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மீள் வருகையை மேற்கொண்ட மொஹமட் ஹபீஸ் 126, ஹரீஸ் சொஹைல் 110, அசாட் ஷாபிக் 80, இமாம் உல் ஹக் 76 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மீள்வருகையை மேற்கொண்ட பீற்றர் சிடில் 3, நேதன் லையன் 2, மிற்செல் ஸ்டார்க், அறிமுக வீரர் மர்னுஸ் லபுஷைன், ஜோன் ஹொலான்ட் ஆகியோர் தலா ஒவ்வ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், உஸ்மான் கவாஜா 85, ஆரோன் பின்ஞ் 62 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட பிலால் ஆசிப் 6, மொஹமட் அப்பாஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 280 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், 6 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தி 462 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியிலக்காக வழங்கிருந்தது. துடுப்பாட்டத்தில், இமாம்-உல்-ஹக் 48, அசாட் ஷபீக் 41, ஹரீஸ் சொஹைல் 39, பாபர் அஸாம் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜோன் ஹொலன்ட் 3, நேதன் லையன் 2, மர்னுஸ் லபுஷைன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

அந்தவகையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும்போது 8 விக்கெட் இழப்புக்கு 362 ஓட்டங்களைப் பெற்று போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக் கொண்டது. துடுப்பாட்டத்தில், உஸ்மான் கவாஜா 141, ட்ரெவிஸ் ஹெட் 72, டிம் பெய்ன் ஆட்டமிழக்காமல் 61, ஆரோன் பின்ஞ் 49 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், யசீர் ஷா 4, மொஹமட் அப்பாஸ் 3, மொஹமட் ஹபீஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக உஸ்மான் கவாஜா தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .