2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ரொனால்டோவால் மீண்டு காலிறுதியில் ஜுவென்டஸ்

Editorial   / 2019 மார்ச் 14 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிப் போட்டிக்கு, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் தகுதிபெற்றுள்ளது.

ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான இறுதி 16 அணிகளுக்கிடையேயான முதலாவது சுற்றுப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்த ஜுவென்டஸ், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில், தமது நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற ஹட்-ட்ரிக் கோல்கள் மூலம் அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்னிலையை இல்லாமற் செய்து காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே, தமது அணித்தலைவர் ஜியோர்ஜியோ செலினி மூலம் கோலொன்றைப் பெற்றதாக ஜுவென்டஸ் எண்ணியபோதும், இக்கோல் பெறப்படுவதற்கு முன்னர், அத்லெட்டிகோ மட்ரிட்டின் கோல் காப்பாளர் ஜான் ஒப்ளக்குடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மோதியதன் காரணமாக குறித்த கோல் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சக முன்கள வீரர் ஃபெடெரிக்கோ பெர்ணார்ட்டெக்கி, போட்டியின் 27ஆவது நிமிடத்தில் வழங்கிய பந்தை, அத்லெட்டிகோ மட்ரிட்டின் பின்கள வீரர் ஜுவன்ஃபிரானுக்கு மேலால் எழும்பி தலையால் முட்டிக் கோலாக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, அத்லெட்டிகோ மட்ரிட்டின் மொத்த கோல் முன்னிலையை ஒன்றாகக் குறைத்தார்.

இதைத் தொடர்ந்து, ஃபெடெரிக்கோ பெர்ணார்டெக்கியின் பிறீ கிக்கொன்று கோல் கம்பத்துக்கு மேலால் சென்றிருந்ததுடன், அவர் மேலெழுந்து தலைக்கு மேலால் உதைந்த உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றிருந்தது. தவிர, பின்கள வீரர் ஜியோர்ஜியோ செலினி, கோல் கம்பத்தை நோக்கி தலையால் செலுத்திய பந்தை, கோல் கம்பத்துக்கு மேலால் ஜான் ஓப்ளக் தட்டி விட்டிருந்தார்.

இதேவேளை, சக மத்தியகள வீரர் கொக்கெயிடமிருந்து பெற்ற பந்தை, கோல் கம்பத்துக்கு மேலால் அல்வரோ மொராட்டா செலுத்தியிருந்தார்.

இந்நிலையில், இரண்டாவது பாதியின் நான்காவது நிமிடத்தில், சக பின்கள வீரரான ஜோவா கான்செலோவிடமிருந்து பெற்ற பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, மொத்த கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

தொடர்ந்து, போட்டி முடிவடைய நான்கு நிமிடங்களிருக்கையில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் மாற்று வீரராகக் களமிறங்கிய ஏஞ்சல் கொரேராவால் ஃபெடெரிக்கோ பெர்ணார்ட்டெக்கி பெனால்டி பகுதிக்குள் வைத்து தள்ளிவிடப்பட்ட வழங்கப்பட்ட பெனால்டியை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்கியதோடு, இறுதியில் 3-2 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்கு ஜுவென்டஸ் தகுதிபெற்றது.

இந்நிலையில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான எஃவ்.சி ஷல்கே 04-இன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி 16 அணிகளுக்கிடையேயான முதலாவது சுற்றுப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியை 7-0 என்ற கோல் கணக்கில் வென்று, 10-2 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, சேர்ஜியோ அகுரோ இரண்டு கோல்களையும், லெரோய் சனே, ரஹீம் ஸ்டேர்லிங், பெர்ணார்டோ சில்வா, பில் பொடன், கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .