2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லிவர்பூலை வென்றது நாப்போலி

Editorial   / 2018 ஒக்டோபர் 05 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலுடனான குழு சி போட்டியின் இறுதி நிமிடங்களில் தமது அணித்தலைவர் லொரென்ஸோ இன்சீனியா பெற்ற கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி வென்றது.

இந்நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென் ஹொட்ஸ்பர் அணியின் மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான குழு பி போட்டியொன்றில் 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும் பிலிப் கோச்சினியோ, இவான் றகிட்டிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, ஹரி கேன், எரிக் லமெலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோவுடனான குழு ஏ போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் வென்றது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக, ஜேக்கப் புரூன் லார்சன், பக்கோ அல்கேஸர், மார்கோ றொய்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், நெதர்லாந்துக் கழகமான பி.எஸ்.வி ஐந்தோவன் அணியின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு பி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் வென்றது. இன்டர் மிலன் சார்பாக, றட்ஜா நைன்கொலன், மெளரோ இகார்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பி.எஸ்.வி ஐந்தோவன் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை பப்லோ றொஸாரியோ பெற்றார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற பெல்ஜியக் கழகமான கிளப் புரூகேயுடனான குழு ஏ போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, அன்டோனி கிறீஸ்மன் இரண்டு கோல்களையும் கொகே ஒரு கோலையும் பெற்றதோடு, கிளப் புரூகே சார்பாகப் பெறப்பட்ட கோலை அர்னோட் டன்ஜுமா பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சேர்பியக் கழகமான றெட் ஸ்டார் பெல்கிரேட் அணியுடனான போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, நெய்மர் மூன்று கோல்களையும் எடின்சன் கவானி, அஞ்சல் டி மரியா, கிலியான் மப்பே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். றெட் ஸ்டார் பெல்கிரேட் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ மரின் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .