2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வீனஸை வீழ்த்தி சம்பியனானார் முகுருஸா

Editorial   / 2017 ஜூலை 16 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியனாக, ஸ்பெய்னின் கார்பைன் முகுருஸா தெரிவானார். ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்தே, சம்பியன் பட்டத்தை அவர் வென்றார்.

சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டி, இந்தத் தொடருக்காக 14ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த முகுருஸாவுக்கும் 10ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த வீனஸுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தமையின் காரணமாக, போட்டித்தன்மையுடன் இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்டது.

முதலாவது செட், அந்தப் போட்டித்தன்மையை வெளிப்படுத்தியது. இரண்டு வீராங்கனைகளும், விட்டுக் கொடுக்காமல் விளையாடினர்.

முதலாவது புள்ளிகளை வீனஸ் பெற்ற போதிலும், அடுத்த புள்ளிகளை முகுருஸா பெற்றார். இருவரும் மாறி மாறிப் புள்ளிகளைப் பெற, 5-5 என்ற நிலைமை உருவானது. 6ஆவது புள்ளிக்கான போட்டியில் 30-30 என்ற நிலைமை இருந்தாலும், இறுதியில் அந்தப் புள்ளியை, முகுருஸா வென்றார். பின்னர், அதற்கடுத்த புள்ளியையும் வென்ற முகுருஸா, 7-5 என்ற புள்ளிகள் கணக்கில், முதலாவது செட்டைக் கைப்பற்றினார்.

முதலாவது செட்டைப் போலவே, இரண்டாவது செட்டும் போட்டித்தன்மையும் அமையுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய முகுருஸா, 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றி, சம்பியன் பட்டத்தைப் பெற்றார்.

இதில், சம்பியன் பட்டத்துக்கான இறுதிப் புள்ளி, தொழில்நுட்பத்தின் உதவியுடனேயே உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, அவ்வாறாக, கிரான்ட் ஸ்லாமின் சம்பியன் புள்ளி கணிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனக் கருதப்படுகிறது.

23 வயதான முகுருஸா, 2015ஆம் ஆண்டிலும், விம்பிள்டன் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார். ஆனால், வீனஸின் சகோதரியான செரினா வில்லியம்ஸிடம், அந்தப் போட்டியில் அவர் தோல்வியடைந்திருந்தார். எனவே, முகுருஸாவுக்கான உணர்வுபூர்வமான போட்டியாகவும் இது அமைந்தது.

போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த முகுருஸா, “2 ஆண்டுகளுக்கு முன்னர், இறுதிப் போட்டியில் வைத்து செரினாவிடம் தோல்வியடைந்தேன். அப்போது அவர், ‘ஒருநாள் நீங்கள் வெல்வீர்கள்’ என்று தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளின் பின்னர், நான் இங்கே இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

அத்தோடு, வீனஸ் வில்லியம்ஸைப் பார்த்து, தான் வளர்ந்ததாகக் குறிப்பிட்ட முகுருஸா, அவரை வெற்றிகொள்ள முடிந்தமை பற்றி, மகிழ்ச்சி வெளியிட்டார்.

37 வயதான வீனஸ் வில்லியம்ஸ், தொழில்முறை டென்னிஸ் யுகத்தில், கிரான்ட் ஸ்லாம் சம்பியன் பட்டத்தை வென்ற வயதானவர் என்ற சாதனையைப் படைக்கும் நோக்கத்துடன் களமிறங்கிய போதிலும், அவரால் அதைச் செய்ய முடியாமல் போனது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .