2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளியேறியது நடப்புச் சம்பியன் ஆர்சனல்

Editorial   / 2018 ஜனவரி 08 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க கிண்ணத் தொடரிலிருந்து நடப்பு சம்பியன் ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.

நேற்று  இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் நொட்டிங்ஹாம் பொரெஸ்ட் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இத்தொடரிலிருந்து ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.

தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து எரிக் லிசாய் தலையால் முட்டி போட்டியின் 20ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் நொட்டிங்ஹாம் பொரெஸ்ட் முன்னிலை பெற்றது. எனினும் அடுத்த மூன்றாவது நிமிடத்தில் றொப் ஹோல்டிங் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டு வர அதனை பியர் மேர்துஸாக்கர் கோலாக்க கோல் எண்ணிக்கை சமமானது.

எவ்வாறெனினும் பெனால்டி பகுதி எல்லையிலிருந்து முதற்பாதி முடிவடைய ஒரு நிமிடம் இருக்க எரிக் லிசாய் பெற்ற அபாரமான கோல் காரணமாக முதற்பாதி முடிவில் நொட்டிங்ஹாம் பொரெஸ்ட் முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் போட்டியின் 64ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை பென் பெரெட்டன் கோலாக்க தமது முன்னிலையை மேலும் நொட்டிங்ஹாம் பொரெஸ்ட் அதிகரித்துக் கொண்டது. தொடர்ந்து போட்டியின் 79ஆவது நிமிடத்தில் டனி வெல்பக் பெற்ற கோலின் காரணமாக, நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் முன்னிலையை ஒரு கோலாக ஆர்சனல் குறைத்தது.

எவ்வாறெனினும் போட்டியின் 85ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியொன்றை கீரல் டெளல் கோலாக்க, 4-2 என்ற கோல் கணக்கில் இறுதியில் நொட்டிங்ஹாம் பொரெஸ்ட் வென்றது. அந்தவகையில், 1996ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பின்னர் முதற்தடவையாக, இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க மூன்றாவது சுற்றுப் போட்டியில் ஆர்சனல் தோற்றது. குறித்த போட்டியில் ஆர்சனலின் இரண்டாம் தர அணியே விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் ஏ.எப்.சி விம்பிள்டன் அணியை வென்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, ஹரி கேன் 2 கோல்களையும் ஜன் வெர்டோங்கன் ஒரு கோலையும் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .