2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை – மேற்கிந்திய சுற்றுப்போட்டிக்கு தங்கக் கவசமிடப்பட்ட சம்பியன் கிண்ணம்

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சேதுராமன்)


இலங்கை – மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஈ.ஆர்.ஐ. டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சம்பியனாகும் அணிக்கு பீங்கானினால் (போர்ஸ்லின்) தயாரிக்கப்பட்டு தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் கவசமிடப்பட்ட சம்பியன் கிண்ணம் பரிசாக வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் இச்சுற்றுப்போட்டி குறித்த செய்தியாளர் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றபோது மேற்படி சம்பியன் கிண்ணம் பகிரங்கப்படுத்தப்பட்டது.

இச்சுற்றுப்போட்டிக்கு என்வயர்மன்ட் ரிசோர்ஸ் இன்வெஸ்ட்மன்ட் குழுமம் (ஈ.ஆர்.ஐ.) பிரதான அனுசரணை வழங்குகிறது. இக்குழுமத்தின் ஓர் அங்கத்துவ நிறுவனமான தங்கொட்டுவ போர்ஸ்லின் நிறுவனத்தால் இச்சம்பியன் கிண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஈ.ஆர்.ஐ. நிறுவனத்தின் தலைவர் லலித் ஹீனகம தெரிவித்தார்.

பீங்கானினால் தயாரிக்கப்பட்ட இக்கிண்ணம் 24 கரட் தங்கம் மற்றம் பிளாட்டினத்தால் கவசமிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றுக்கு பீங்கானினால் தயாரிக்கப்பட்ட சம்பியன் கிண்ணம் வழங்கப்படுவது இதுவே முதல்தடவையாகும்.

இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார மேற்கிந்திய அணியின் தலைவர் டெரன் ஷமி ஆகியோரும் இச்செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றினர்.

ஒருநாள் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள இத்தருணத்தில் என்வயர்மன்ட் ரிசோர்ஸஸ் இன்வெஸ்ட்மன்ட் போன்ற ஒரு முன்னணி நிறுவனம் இச்சுற்றுப்போட்டிக்கு அனுசரணை வழங்குவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்  என ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கைக் கிரிக்கெட் சபை) செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மேற்கிந்திய அணி3 டெஸ்ட் போட்டிகளிலும் 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  இரண்டாவது போட்டி கொழும்பு கெத்தாராம அரங்கில் நவம்பர் 23 திகதி ஆரம்பமாகவுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசெம்பர் முதலாம் திகதி முதல் பல்லேகல அரங்கில் நடைபெறவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சுற்றுப்போட்டி டிசெம்பர் 9 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது. முதல் இரு  போட்டிகள் 9, 11 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

ஏனைய 3 போட்டிகள் 15, 17, 19 ஆம் திகதிகளில் கொழும்பு கெத்தாராம அரங்கில் நடைபெறவுள்ளன. டிசெம்பர் 21 ஆம் திகதி 20 ஓவர் போட்டியொன்றில் இரு அணிகளும் மோதவுள்ளன.   (Pix By: Pradeep Pathirana)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X