2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்படும்போது நாடு பின்னோக்கிச் செல்லும் சந்தர்ப்பம் உண்டு'

Suganthini Ratnam   / 2016 மே 26 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்படும் ஒவ்வொரு விநாடியும் நாடு பின்னோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பம் உண்டு என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஆரையம்பதிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனைப் பிரசேத்தில் போறூட் வீட்டுத்திட்டக் குடியிருப்பாளர்கள் 67 பேருக்கு   உறுதிப்பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வு, ஆரையம்பதி பிரதேச செயலக மண்டபத்தில் புதன்கிழமை (25) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நாடு பின்னோக்கிச் செல்லுமாயின், அனைத்து நடவடிக்கைகளும் பின்தங்கிச் செல்லும். இதன் காரணமாக அரசியல் தீர்வு உடனடியாக வழங்கப்பட்டு, அதிகாரப்பகிர்வு உடனடியாக வழங்கப்பட்டு, அந்த அதிகாரங்கள் மக்களுக்கு போய்ச் சேர்வதற்கான வழி வகைகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவைப்பாடு அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது' என்றார்.

'மேலும், அரசியல் தீர்வை பெற்றுத்தருவார்கள் என்பதில் ஜனாதிபதி மீதும் பிரதமர் மீதும் அரசியல் தலைமைகளும் மக்களும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். கிடைக்கும் அரசியல் தீர்வு அனைத்து மக்களுடைய தனித்துவத்தையும் கௌரவத்தையும் அந்தஸ்ததையும் பாதுகாக்கின்ற, பிரதிபலிக்கின்ற, மதிக்கின்ற அதேநேரத்தில் அதிகாரத்தைப் பெற்றவர்களாக மாறுவதற்கு வழி செய்யப்பட வேண்டும்.  

இலங்கையர்கள் என்று பெருமையாகக் கூறுமளவுக்கு  இலங்கையை மாற்ற வேண்டிய தேவை இந்த நாட்டுத் தலைமைகளுக்கு உள்ளது. இலங்கையர்கள் என்று கூறுவதில் நாம் பெருமை அடைவோம்' என்றார்.
'நாங்கள் எவரும் மதத்தை விட்டுக்கொடுக்க முடியாது. இனத்தை யாரும் விட்டுக்கொடுக்க முடியாது. ஒற்றுமையாக வாழ்வதையே எதிர்பார்க்கின்றோம். கிழக்கு மாகாண மக்கள் ஜனநாயக ரீதியில் வாழ்வதற்கு துடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலத்தில் துன்பங்களை அனுபவித்த மக்கள், அதிகாரப்பகிர்வு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அந்த அதிகாரப்பகிர்வை தாருங்கள் என்றே கேட்கின்றோம். அதிகாரப்பகிர்வை வழங்கி மக்களின் சுபீட்சத்துக்கு வாழ்வளிக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபை எடுத்த பல முயற்சிகளின் பயணாக பல நிதியொதுக்கீடுகளை கிழக்கு மாகாண சபை கொண்டு வந்து கொண்டிருக்கின்றது.

எமது மாகாண சபைக்கான நிதியை ஒட்டுமொத்தமாக தரப்படும்போது, எமது மாகாணத்தின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதுடன், அரசியல் அதிகாரமுள்ள சபையாக கிழக்கு மாகாண சபை இயங்கும். மாகாண சபையில் மத்திய அரசாங்கத்தையும்; விட பலமான ஒற்றுமைமிக்க வேறுபாடுகள் இல்லாத சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகளை களைந்த ஒரு மாகாண சபையை இந்த நாட்டில் பார்க்க வேண்டுமாக இருந்தால், அது கிழக்கு மாகாண சபை என்பதில் நாங்கள் பெருமடைகின்றோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .