2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆத்திரப்படாமல் அறிவு பூர்வமாக பதிலளிக்க வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 24 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

அண்மையில் ஊடகங்கள் மூலமாக பிரதியமைச்சர் அமீரலி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்‌வரனுக்கு எதிராகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் கருத்துகளைக் கொட்டியிருந்தார். அதற்காக நாம் அவரைப் போல் ஆத்திரப்படாமல் அறிவு பூர்வமாக பதிலளிக்க வேண்டிய தார்மீக கடமைப்பாட்டை கொண்டிருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வியாழக்கிழமை (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்களின் போராட்டம் 'சைபரில்'ஆரம்பித்து சைபரிலேயே முடிந்ததாக பிரதியமைச்சர் கூறியிருந்தார். இது அவரது சைபர் நிலைப் பார்வையினையே வெளிக்காட்டுகிறது. ஏனெனில் 1987இல் மாகாண சபை முறை கிடைத்தமை போராட்டத்தின் ஒரு விளைவு என்பதையும், சிறுபான்மை தமிழர்களின் இனப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது. தமிழ் போராளிகளின் போராட்டம் என்பதையும் பிரதியமைச்சர் அவர்களால் ஏன் விளங்கிக்கொள்ள முடியவில்லை?

தமிழர்களின் போராட்டம் 'சைபரில்' முடிந்தது என்றும் தமிழர்களை 'பிச்சைக்காரர்கள்' ஆக்கியது என்றும் மட்டமான மலினமான மொழியினைப் பயன்படுத்தியிருந்தீர்கள்.

இந்த அரசியல் உங்களை உயர்த்திவிடும் என்று கனவு காண வேண்டாம். நீங்கள் கூறிய அதே பிச்சைக்கார தமிழர்களும் தங்களுக்கு வாக்களித்திருந்தார்கள் என்பதை மறக்க வேண்டாம். இவ்வாறான கருத்துக்கள் எதிர்காலத்தில் தமிழர்களையும், உங்களையும் இரு துருவங்களாக தள்ளுவதற்கு இவ்வாறான வார்த்தைகள் வழிகோலலாம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் கேவலப்படுத்த நினைக்காதீர்கள். 2010ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து நீங்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தீர்கள் என்பதையும் மிகக் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் தமிழர்களின் வாக்குப்பலத்தினால் தான் இம்முறை 2015இல் தெரிவு செய்யப்பட்டீர்கள் என்பதையும் இவ்வளவு விரைவாக மறந்து விட்டீர்களே! அந்த மக்களை மடையர்களாக எண்ணி விட வேண்டாம். உண்மையாக கூறுகின்றேன் இதில் இனவாதம் இல்லை. இனிமேலாவது தெளிந்து, தெரிந்து செயற்படுங்கள்.

கடந்த பொதுத்தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கே மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைமை வழங்கப் போவதாக நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமை அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தமையை மறந்துவிட்டீர்களா?

கடந்த காலத்தில் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் விலை போகாமல், சோரம் போகாமல் தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு கொள்கையோடு கூடிய அரசியலையே நாங்கள் செய்து வருகின்றோம். பதவிக்காக எமது மக்களை நாங்கள் பகடைக்காய்களாக உருட்டி விளையாட விரும்பவில்லை. நாங்களும் அமைச்சுப் பதவிகளுக்காக அங்கலாய்த்து நின்றிருந்தால், தங்களைப் போன்றோரின் நிலைமை எப்படி இருந்திருக்கும்? என நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .