2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'இனப்பிரச்சினை தீர்க்கப்படுமென்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 11 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை சர்வதேச ரீதியிலும் தேசிய மட்டத்திலும் இப்பொழுது துளிர்விட ஆரம்பித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் முன்னின்று பாடுபட்டுக்கொண்டிருக்கிறார் எனவும் அவர் கூறினார்.

'கலைமகள் சாதனையாளர் விழா' ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வித்தியாலயத்தின் பிரதி அதிபர் என்.இராஜதுரை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின்போது, இவ்வித்தியாலயத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம், ஆசிரியர் கலாசாலை, கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் உயர் கல்வியை பூர்த்திசெய்த 35 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால், எம்மைச் சூழ்ந்திருக்கின்ற ஏனைய பிரச்சினைகள் தானாகத் தீரும். அல்லது, சிறு பிரயத்தனங்களின் மூலம் தீர்க்கப்பட்டு விடும்' என்றார்.

'மேலும் நான் ஆசிரியராக, அதிபராக, விரிவுரையாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, அரசியல் வாத்தியாராக இருந்துள்ளேன். தற்போது அரசியல்வாதியாக உள்ளேன்.  ஆனால், இலங்கையின் அரசியலில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இலஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம், உழைப்பதற்காக அரசியலைப் பயன்படுத்துவது இவ்வாறானவையே அரசியலில் மலிந்து கிடக்கின்றன.

இந்தக் காரணங்களாலேயே இலங்கையின் அரசியலில் எனக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. ஆயினும், என் மாணவர்கள் என்னை அரசியலுக்குள் எவ்வாறோ இழுத்துக்கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள். இவர்களின் பேராதரவு காரணமாக நான் மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டேன்.

அரசியல் கலாச்சாரம் ஊடாக நாம் நல்லதைச் செய்து தூய்மைப்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம். அதனால், இப்பொழுது அரசியலில் ஒட்டிக்கொண்டிருக்கின்றேன்' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .