2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'இரத்த வங்கியினை இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியினை மிக விரைவாக இயங்கச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சுகாதாதர பிரதியமைச்சர் பைஷால் காசிம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று(22) மாலை சுகாதார  பிரதியமைச்சரை காத்தான்குடி மீடியா போரம் சந்தித்து,காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அவரிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறை மற்றும் ஆளணிப்பற்றாக்குறைகளை எதிர் காலத்தில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம்.

சுகாதாரத்துறையை முன்னேற்றவும் வைத்தியசாலைகளுக்கு தேவையான வளங்களையும் ஆளணிகளையும் பெற்றுக்கொடுக்கவும் எமது சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதுடன் அது தொடர்பில் கூடிய கரிசணையும் எடுத்து வருகின்றது.

இது விடயத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

நாடு பூராவுமுள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று அங்கு நிலவும் குறைகளை சீர் செய்யுமாறு சுகாதார அமைச்சர் என்னை பணித்ததன் பேரில் நான் வைத்தியசாலைகளுக்கு சென்று அங்குள்ள குறைகளை கேட்டு வருகின்றேன்.

அந்த வகையில் சனிக்கிழமை(21)திருகோணமலை மாவட்டத்திலுள்ள புல்மோட்டை, குச்சவெளி, கிண்ணியா போன்ற வைத்தியசாலைகளுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டேன்.

பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்ய இருந்தபோது, எமது அமைச்சின் பணிப்பாளர் திடீரென கொழும்பு திரும்பியதால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்வதை பிற்போட்டுள்ளோம். டிசெம்பர் மாதம் ஒரு தினத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிடுவோம்.

எதிர்வரும் 2016ஆம் ஆண்டு இங்குள்ள வைத்தியசாகைளின் தேவைகளில் பலவற்றை நிவர்த்தி செய்து கொடுக்கப்படும்.

அதனடிப்டையில் காத்தான்குடி மீடியா போரத்தினால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வளங்கள் தொடர்பாக என்னிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களில் பல விடயங்கள் சீர் செய்யப்படுமென நான் கருதுகின்றேன்.

இதில் முதல் நடவடிக்கையாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குக்குரிய உபகரணங்களை வழங்கி அந்த இரத்த வங்கியினை இயங்கச் செய்ய மிக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு இங்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் கடமையாற்ற விருப்பம் தெரிவிப்பாராயின் அவரின் சம்மதத்தையும் பெற்றுத்தந்தால் அவரையும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பெற்றுத்தரமுடியும்.

1,200 வைத்தியர்கள் தமது படிப்பை முடித்து வெளியேறவுள்ளனர். அதேபோன்று அடுத்த ஆண்டு 1,800 தாதியர்கள் வெளியேறவுள்ளனர். அவர்கள் நாடுபூராகவுமுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்காக பிரித்து அனுப்பப்படுவார்கள். அதன்போது இங்குள்ள வைத்தியசாலைகளுக்கும் கடமையாற்ற அனுப்பப்படுவார்கள். இதனால் வைத்தியர் மற்றும் தாதியர் பற்றாக்குறை தீர்த்து வைக்கப்படும்.

மாகாண சபையின் கீழுள்ள எந்தவொரு வைத்தியசாலையையும் மத்திய அரசின் கீழுள்ள எமது சுகாதார அமைச்சு பொறுப்பேற்காது. இதில் அமைச்சர் ராஜித மிகவும் கவனமாக இருக்கின்றார். ஆனால் மாகாண சபையின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான வளங்களையும் ஆளணிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.

இங்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர், டொக்டர் எம்.சிஹான், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் டீன் பைறூஸ், அதன் உப தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X