2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கிழக்கின் ஆட்சியில் மு.காவும் த.தே.கூவும் பங்குதாரர்கள்’

Yuganthini   / 2017 மே 21 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன்

“கிழக்கு மாகாண ஆட்சியின் பங்குதாரர்கள் என்ற அந்தஸ்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் நிரந்தர அந்தஸ்தாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நாங்கள். அதன்மூலமே, நாங்கள் பல விடயங்களைச் சாதிக்க முடியும்” என, மு.காவின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பிழைப்புவாத அரசியலையோ அல்லது சந்தர்ப்பவாத அரசியலையோ செய்யவில்லை என்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆரையம்பதி, காங்கேயனோடை பிரதேச சிறுவர் பூங்கா மற்றும் முனிச் வீதி, புளியந்தீவு வீதி, டச்பார் வீதி, கல்லடி வேலூர் மற்றும் திசவீரசிங்கம் வீதிகளை​த் திறந்துவைக்கும் நிகழ்வுகள், அமைச்சர் ஹக்கீம் தலைமையில்,இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றன. இவற்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள், தமிழ் பேசும் சமூகங்கள் என்ற அடிப்படையில், அரசியல் ரீதியாக ஒன்றித்துப் பயணிக்க வேண்டிய அவசியம், மிகத் தெளிவாக உணரப்பட்ட காலத்தில் நாங்கள் வாழ்கின்றோம்.

“கடந்தகால பூதங்கள், மீண்டும் கிளம்புகின்ற இக்காலத்தில், சட்டம், ஒழுங்கு விடயத்தில் தீவிர சக்திகளுக்கு ஆட்சியாளர்கள் அச்சம் கொள்கின்றார்களா என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு, சில சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. இந்தச் சூழலில், நாங்கள் இன்னும் இறுக்கமாக ஒன்றுபடவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

“இதேவேளை, அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதியமைச்சர் அமீர் அலி ஆகிய இருவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு, மு.காவுக்கு துரோகமிழைத்துவிட்டுச் சென்றனர்.

“இதற்காக அவர்கள் சொன்ன காரணமெல்லாம், அபிவிருத்திக்காக நாங்கள் அரசாங்கத்துடன் நிற்கவேண்டும் என்பதாகும். அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் ஆகிய இருவரும், மஹிந்த ராஜபக்ஷ தோற்கும் இறுதிவரை அவருடன் இருந்துகொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைத் தோற்கடிப்பதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டனர். இப்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் தொங்கிக்கொண்டு நிற்கின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .