2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘சர்வமத செயற்பாடுகள் பெருந்துணை புரியும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஜூலை 18 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாட்டில் பெரும்பாலானோர் ஏதாவதொரு மத நம்பிக்கையைச் சார்ந்தவர்களாக இருப்பதால், நீண்டகாலமாக நாட்டில் நிலவி வருகின்ற முரண்பாடுகளுக்கு சகிப்புத் தன்மை மூலம் உடன்பாடு காணமுடியுமென, மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்பு நம்புகின்றது” என, தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார்.

மாவட்ட சர்வமதப் பேரவையின் மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வு, கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இன்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது. பேரவையின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் செயலமர்வில், சர்வமதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும், தேசிய சமாதானப் பேரவையின் அலுவலர்களும் பங்குபற்றினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோகரன் கூறியதாவது,

“முரண்பாடுகளும் அதன் பின் தொடர் விளைவாக வன்முறைகளும் உருவாவது இயல்புதான். ஆயினும், கருத்துப் பகிர்வு, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, கௌரவம், மதிப்பளித்தல் மற்றும் ஆன்மீகச் செயற்பாடுகள் என்பனவற்றின் ஊடாக, வன்முறைகளையும் அழிவுகளையும் தவிர்த்து, அனைவரும் சமத்துவமாக அஹிம்சாவளியில் வாழலாம்.

“சமாதானத்தைத் தோற்றுவிப்பதில், சர்வமதச் செயற்பாடுகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. நெடுங்கால பிணக்குகளுக்கும், ஆன்மீக அறநெறிச் செயற்பாடுகளின் மூலம் ஆயுதப் பிரயோகமின்றி இரத்தமின்றி, அழிவுகளின்றி வெற்றி கண்டுவிடலாம்.

“காலத்துக்கு காலம் அரசியல் மாற்றங்கள் ஏற்படும்போது, அதன் விளைவாக உருவாகின்ற முரண்பாடுகளைச் சாதகமான முறையில் முறியடிப்பதற்கும் சர்வமத செயற்பாடுகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

“பரஸ்பர நட்புறவுடன் வாழும் அந்யோந்யமிக்க சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் தூண்டி விடப்படும் பொழுது அதனால் எல்லோருமே பாதிக்கப்பட வேண்டி வரும்.

“அந்த நிலைமை இனியும் தொடர மத நம்பிக்கை வைத்திருக்கின்ற நாம் இடமளிக்கக்  கூடாது. கடந்த கால வன்முறையின் விளைவாக ஏற்பட்ட இழப்பு அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பயன்மிக்க, பெறுமதி மிக்க பாடங்களை பிரயோகித்து இனிமேலும் அழிவுகள் வராமல் பாதுகாக்க சர்வமத ஒன்றியம் பாடுபடும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .