2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'தமிழ் அரசியல் கைதிகள் பற்றி ஜனாதிபதி கரிசனையுடன் சிந்திக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு சிறையில் தான் ஒன்றரை வருடகாலத்தை கழித்ததை நினைவுவைத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதுவித விசாரணைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின்றி கைதிக்கூண்டில் கழிக்கும் தமிழ் அரசியல் கைதிகள்; பற்றியும் கரிசனையுடன்; சிந்திக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கடந்த ஞாயிற்றுக்கிழமை 10) பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி, தான் மட்டக்களப்புக்கு வரும்போதெல்லாம் 1971ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு சிறையில் கழித்த ஒன்றரை வருட சிறைக்கூட வாழ்க்கை தனக்கு நினைவுக்கு வருவதாகவும் ஆனால், தான் ஒரு சேகுவேராக்காரனாக இருந்திருக்காதபோதிலும், எவ்வாறோ தன்னைக் கொண்டு வந்து சிறையில் அடைத்துவிட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தன்னை அடைத்து வைத்திருந்த அந்த சிறைக்கூண்டை மூடவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சிறை வாழ்க்கையின் துயரங்களையும் குற்றமற்ற நிலையில் சிறையில் தமது வாழ்நாள் முடக்கப்படுவது எவ்வளவு கொடுமையானது என்பது பற்றியும் நன்கு உணர்ந்திருக்கும் ஜனாதிபதி, விசாரணைகளின்றியும் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்படாமலும் சுமார் 25 வருடங்களை இலங்கையின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி கருணையோடும் கரிசனையோடும் சிந்தித்து அவர்களுக்கு விடுதலையளித்து அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக் கூண்டுகளையும் மூட முயற்சிக்க வேண்டும்.

முடிவும் தெரியாமல் காரணமும் இல்லாமல் சுமார் 216 தமிழ் அரசியல் கைதிகள் எதிர்காலம் இருட்டடிப்புச் செய்யப்பட்ட நிலையில் சிறைக் கூடங்களில் தமது வாழ்நாளை கழிக்கிறார்கள். இவர்களது எதிர்காலம் பற்றி இந்த நல்லாட்சியில் முடிவு கண்டாக வேண்டும். இளமையை இருட்டில் கழித்தவர்களின் அந்திம காலமாவது ஒளியாக இருக்க ஜனாதிபதி வழிவகை செய்ய வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X